
சென்னை,
தமிழ் திரைப்பட உலகில் 1960 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. சரோஜா தேவியின் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.
தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் 'அபிநய சரஸ்வதி' எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார்.
சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவியின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
பழம்பெரும் திரைப்பட நடிகை, "அபிநய சரஸ்வதி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்த திரைப் படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. "சரோஜா தேவி" எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்ற சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான படங்களில் நடித்த சரோஜா தேவி கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அனைத்துக் குடும்பங்களுக்கு நன்கு அறிமுகமானவர். மத்திய அரசின் பத்மபூஷன் மற்றும் தமிழக அரசு, ஆந்திர அரசு, கர்நாடக அரசால் வழங்கப்படும் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட, மூத்த திரைக் கலைஞர் சரோஜா தேவி, வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்தி என சுமார் 200 திரைப்படங்களுக்கும் மேல் தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தவர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அமரர் என். டி.ராமராவ், அமரர் ராஜ்குமார் என, இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றவர். சரோஜா தேவி புகழ், உலகம் முழுவதும் உள்ள இந்தியத் திரைப்பட ரசிகர்கள் நினைவில் என்றும் வாழும்.
சரோஜா தேவி அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
தமிழ் திரையுலகில் கன்னடத்துப் பைங்கிளி அபிநய சரஸ்வதி என்று புகழப்பட்டு பத்மபூஷன் விருது பெற்ற ஒப்பற்ற கலைஞர் நடிகை சரோஜா தேவியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது தமிழகத்தின் இரண்டு மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களோடு இணையாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர். நாகரீகமான நடிப்புக்கும் குடும்ப பாங்கான உடை அலங்காரத்திற்கும் பெயர் போனவர்.
மொழி வேற்றுமை இல்லாமல் தேச ஒற்றுமைக்கு வழி வகுத்தவர்கள் இவர்கள்... அவரின் மறைவு திரை உலகத்திற்கு மட்டுமல்ல பாரத தேசத்திற்கு ஒரு இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.. வருங்காலத்தில் திரைப்பட நடிகைகள் அவர்களைப் போல தங்களது நடிப்பையும் வழக்கங்களையும் வாழ்க்கையையும் பின்பற்றினால் சிறப்படைய முடியும்.. என் நெஞ்சார்ந்த அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்
தென்இந்திய சினிமா வரலாற்றில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த புகழ்பெற்ற நடிகை சரோஜா தேவி இன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர் திரையுலகில் அறிமுகமான முதற்கட்டத்திலேயே பல முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
திரையுலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களை ஏற்று, வெகுவிரையில் புகழ்பெற்றார். தன் இயல்பான நடிப்புத்திறனால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அவர் நடிப்பில் உருவான திரைப்படங்கள் என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும். பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற தேசிய விருதுகளையும், பல திரைப்பட விருதுகளையும் பெற்றவர்.
அவரின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் திரைப்படத்துறையினர், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.