
புதுடெல்லி,
இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நள்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர், நம்முடைய நாடும், சட்ட முறைகளும் தனித்துவ சவால்களை எதிர்கொண்டுள்ளன. வழக்கு விசாரணைகளில் காலதாமதங்கள் ஏற்படுகின்றன என வேதனை வெளியிட்டார்.
பல ஆண்டுகளாக விசாரணை கைதிகளாகவே சிறையில் காலம் கழித்த பின்னர், அவர்கள் நிரபராதி என தெரிய வரும் பல வழக்குகளையும் நாம் பார்க்கிறோம் என்றும் அவர் வேதனையுடன் பேசினார்.
நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என வேதனை தெரிவித்த அவர், எனினும், இந்த சவால்களை எங்களுடைய சக குடிமகன்கள் தீர்ப்பார்கள் என நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
அவருடைய இந்த பேச்சுக்கு மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் கூறியது முற்றிலும் சரி. நம்முடைய நீதி நடைமுறை விரைவாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்றார்.
இந்நிலையில், அவருக்கு கடுமையான தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதில், சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஓரிரு நாட்களில் அவர் பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.