
சென்னை,
'பேராண்மை' படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், தன்ஷிகா. தஞ்சையில் பிறந்த தன்ஷிகா சாய்பாபா மீது கொண்ட பக்தி காரணமாக தன் பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்டார். இவர் "மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது, கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் 'யோகிடா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பெண்களை மையமாக கொண்டு ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதில் பேசிய நடிகை சாய் தன்ஷிகா, "நானும் விஷால் அவர்களும் கடந்த 15 வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறோம். நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறிய நாங்கள் வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். விஷால் அவர்கள் எப்போது மறியாதையுடன் நடந்து கொள்வார், எனக்கான நிறைய இடங்களில் குரல் கொடுத்துள்ளார். விஷால் அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.