நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். டாக்ஸிக் படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். கீது மோகன் தாஸ் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான நளதமயந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கீது மோகன்தாஸ் லையர்ஸ் டைஸ், மூத்தோன் படங்களை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீது மோகன்தாஸ் , தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தில் கியாரா அத்வானி நடிக்கிறார். ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கர்நாடகாவில் பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கேவிஎன் புரோடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த நிலையில், டாக்ஸிக் படத்தின் புதிய அறிவிப்பு வரும் 8-ம் தேதி காலை 10.25 மணிக்கு வெளியாகுமென படக்குழுவினர் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். இந்த அறிவிப்பு படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் யாஷ் ராமாயாணா எனும் திரைப்படத்தில் ராவணனாக நடித்து வருகிறார்.