அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கும் பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது - காங்கிரஸ் கேலி

7 hours ago 3

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக கடந்த வாரம் புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் கானா நாட்டுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். இந்த நிலையில் இன்று 5 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

இந்த நிலையில் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் தனது பிரதமரை இந்தியா வரவேற்கிறது. 3 வாரங்கள் அவர் நாட்டில் இருப்பார்; பின்னர் மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வெளிநாடுகளுக்கு அடிக்கடி பறக்கும் தனது பிரதமரை இந்தியா வரவேற்கிறது. அவர் 3 வாரங்களுக்கு நாட்டில் இருப்பார்; பின்னர், மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் காத்திருக்கும் மக்களைச் சென்று சந்திக்க தற்போது அவருக்கு நேரம் கிடைக்கும். பஹல்காம் பயங்கரவாதிகள் ஏன் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறித்து அவர் சிந்திப்பார். அவரது சொந்த மாநிலத்தில் (குஜராத்) பாலம் இடிந்து விழுந்த விபத்து குறித்து சிந்திப்பார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்துக்கு உதவிகளை வழங்குவார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெரிய நிறுவனக் குழுக்களுக்கு மட்டுமில்லாமல், வெகுஜன மக்களின் நுகர்வை அதிகரிக்கவும், தனியார் நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிக்கவும் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து அவர் ஆராயலாம்.

ஒரு மாற்றமாக, மழைக்காலக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலை வகுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article