
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைகோள் அடிப்படையில் இணைய சேவை வழங்கி வருகிறது. சேட்டிலைட் அடிப்படையில் இணைய சேவை வழங்கப்படுவதால் ஸ்டார்லிங்க் நிறுவன இணைய சேவை கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் அதிவேகத்தில் இருக்கும். பேரிடர் காலங்களிலும் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படாது.
முக்கியமாக செல்போன் அலைவரிசை பயன்படுத்த முடியாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளில் கூட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழி இணைய சேவை நன்றாக கிடைக்கும் என்றும், பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றிலும் அறிமுகமான ஸ்டார்லிங்க் இந்தியாவிலும் நுழைய அனுமதி கோரி வந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி அளித்துள்ளது.
கடந்த மாதம் தொலைத்தொடர்பு அமைச்சகம் முதற்கட்ட ஒப்புதல் வழங்கிய நிலையில், விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான 'இன்ஸ்பேஸ்' தற்போது 5 ஆண்டுகளுக்கான அனுமதியை வழங்கி உள்ளது. அலைக்கற்றை வாங்குதல், தரைவழி உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை இனி இந்நிறுவனம் மேற்கொள்ளும்.இந்தியா முழுவதும் 600 ஜிகாபைட்ஸ் செயல்திறனை வழங்கும் திறன்கொண்ட ஸ்டார்லிங்க், செயற்கைக்கோள் வழி இணையசேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை பெற வாடிக்கையாளர்கள் மாதம் சுமார் ரூ.3,000–ரூ.4,200 வரை கட்டணம் செலுத்த நேரிடும் எனக்கூறப்படுகிறது. சேவை பயன்பாட்டுக்கு தேவையான உபகரணங்களின் விலை சுமார் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.