
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்து விட்டன. முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன. போர் சூழல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வருகிறது. பி.சி.சி.ஐ. வட்டாரங்களில் வெளியான தகவலின் படி ஐ.பி.எல். தொடர் வரும் 15 அல்லது 16ம் தேதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சிறந்த இன்னிங்ஸ் எது என்று கேட்டால் அனைவரும் அளிக்கும் பதில் 14 வயதான சூர்யவன்ஷி குஜராத் அணிக்கு எதிராக சதம் அடித்தது என்று கூறுவர். ஆனால், இந்திய அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பெங்களூரு வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் சி.எஸ்.கே அணிக்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம் அடித்ததுதான் சிறந்த இன்னிங்ஸ் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆர்.சி.பி அணியில் படிதாரின் அச்சமற்ற கேப்டன் அணுகுமுறை மற்றும் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் ஆகியவை சிறப்பான முறையில் இருந்துள்ளது. விராட் கோலி இயக்கி வரும் ஒரு இஞ்சின் இது. மேலும், பில் சால்ட் விராட் கோலி மற்றும் படிதார் ஆகியோர் சிறப்பாக இயங்கி வரும் ஒரு யூனிட்டாக இது அமைந்துள்ளது. அவர்களுடைய மிடில் வரிசையை பார்க்கும் போது ஜித்தேஷ் ஷர்மா, டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் இருக்கிறார்கள்.
இந்த ஐ.பி.எல் தொடரில் ரொமாரியோ ஷெப்பர்ட் சி.எஸ்.கே அணிக்கு எதிராக 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தது சிறந்த இன்னிங்ஸ் ஆகும். மேலும், பெங்களூரு அணியின் பந்துவீச்சை பார்க்கும் போது மற்ற ஆண்டுகளை விட தற்போது சிறந்த முறையில் இருக்கிறது. புவனேஸ்வர் குமார், சுயாஷ் ஷர்மா மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.