நடப்பு ஆண்டில் ரூ.67 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை இந்தியா அடையும்: வர்த்தக அமைச்சகம்

1 week ago 4

புதுடெல்லி,

இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு ஆண்டின் அக்டோபரில் 19 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதுபற்றி மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், வர்த்தக சரக்குகளின் ஏற்றுமதி 17 சதவீதம் வரை உயர்ந்தும், சேவைக்கான சரக்குகளின் ஏற்றுமதி 21 சதவீதம் வரை உயர்ந்தும் உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி வர்த்தக செயலாளர் சுனில் பர்த்வால் கூறும்போது, நமக்கு மிக சிறந்த மாதம் இது. நம்முடைய ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சியானது மிக சிறந்த ஒன்றாக உள்ளதுடன் மட்டுமின்றி, ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலஅளவை பாருங்கள். இந்தியாவில் இருந்து இதுவரையில் இல்லாத வகையில், அதிக அளவில் பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. அதனால், நாம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து உள்ளோம் என்றார்.

இந்திய வர்த்தக வரலாற்றில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் இதுவே மிக அதிக ஏற்றுமதியாகும். 2024-ம் ஆண்டுக்கான ஏப்ரல் முதல் அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியானது, ரூ.39 லட்சத்து 55 ஆயிரத்து 340 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இது 7.28 சதவீதம் அதிகம் ஆகும்.

2025 நிதியாண்டில் 800 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.67 லட்சம் கோடி) என்ற இலக்கை அடைவோம் என சில மாதங்களுக்கு முன் மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் நம்பிக்கை வெளியிட்டார். இதுபற்றி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், இந்த வகையில் நாம் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொண்டால், நிச்சயம் நடப்பு ஆண்டில் ரூ.67 லட்சம் கோடி என்ற ஏற்றுமதி இலக்கை இந்தியா அடையும்.

நாம் சாதனைகளை முறியடிப்போம் என்றார். ஏற்றுமதியில் மூலோபாய விசயங்களில் அரசு கவனம் செலுத்தியதில் நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சில துறைகள், சில நாடுகள் என நாம் கவனம் செலுத்தியதில், மென்மேலும் நமக்கு பலன் கிடைத்திருக்கிறது. உற்பத்தியில் போட்டியிருந்ததும் கூட, அதற்கான பலன்களை தந்துள்ளது.

உற்பத்தி, பொறியியல், ஆடை உள்ளிட்ட முக்கிய துறைகளில் அரசு அதிக கவனம் செலுத்தியது ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவியது என்று அவர் கூறியுள்ளார். பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 39 சதவீதத்திற்கு கூடுதலாகவும், மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 45 சதவீதத்திற்கு கூடுதலாகவும் அதிகரித்து உள்ளது. கரிம மற்றும் கனிம ரசாயன பொருட்களின் ஏற்றுமதியும் 27 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்து உள்ளது என்றார்.

இதேபோன்று, அரிசி மீது உணவு பாதுகாப்பை முன்னிட்டு ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும், அரிசி ஏற்றுமதியும் 85 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்து உள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஆடைகளில், ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியும் 35 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்து உள்ளது. அதனால், நாம் கவனம் செலுத்திய அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், வர்த்தக பற்றாக்குறையும் ரூ.5 லட்சத்து 6 ஆயிரத்து 971 கோடியில் இருந்து ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 169 கோடியாக அதிகரித்து உள்ளது. இது அரசுக்கு தொடர்ந்து கவலையளிக்கும் விசயங்களில் ஒன்றாக உள்ளது.

Read Entire Article