புதுக்கோட்டை: நகைக்காக சித்தி மகளை குத்தி கொன்ற வழக்கில் அண்ணனுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி (44). இவர்களது ஒரே மகள் லோகப்பிரியா (20). மின்சார வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு அலுவலராக பணியாற்றி வந்த பழனியப்பன், கடந்த 2013ம் ஆண்டு இறந்துவிட்டார். கணவர் இறந்ததால் அவரது மனைவி சிவகாமிக்கு மின்சார வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. இந்நிலையில் கடந்த 27.4.2021 அன்று வீட்டில் லோகப்பிரியா மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது மாலை 6.30 மணிக்கு அண்ணன் முறை கொண்ட திருமயம் அருகே உள்ள பெருந்துறையை சேர்ந்த லெட்சுமணன் (எ) சுரேஷ் (32) என்பவர் லோகப்பிரியா வீட்டுக்கு வந்து அவரிடம் பணம், நகை கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் லோகப்பிரியா அணிந்திருந்த 10 கிராம் தங்க சங்கிலி, அவரது செல்போன் மற்றும் ஸ்கூட்டரையும் எடுத்து சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரன், சித்தி மகளை கொலை செய்த குற்றத்துக்காக சுரேஷ்க்கு தூக்குத்தண்டனையும், கத்தியை காட்டிய மிரட்டிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத்தண்டனையும், நகையை பறித்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் நேற்று இரவு அடைக்கப்பட்டார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சுரேஷ் திருமயம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நகைக்காக தங்கை குத்திக்கொலை அண்ணனுக்கு தூக்கு தண்டனை: புதுகை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.