
சென்னை,
அண்ணா நகரைச் சேர்ந்தவர் வைர நகை வியாபாரி சந்திரசேகர். இவர் வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரிடம், மற்றொரு வியாபாரி ரூ.20 கோடி மதிப்பில் வைரம் வேண்டும் என கேட்டுள்ளார். அவற்றை வடபழனியில் உள்ள பிரபல ஓட்டலுக்கு கொண்டு வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி, சந்திரசேகர் ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகளுடன் நேற்று வடபழனியில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அங்கு ஓட்டல் அறையில் மறைந்திருந்த 4 பேர் சந்திரசேகரை கட்டி போட்டுவிட்டு ரூ.20 கோடி மதிப்பிலான வைர நகைகளுடன் காரில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து வைரத்துடன் தப்பிய கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வைரத்தை திருடிவிட்டு தப்பிய 4 பேரை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர். சிவகாசி அருகே காரில் சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.
லண்டன் ராஜன், அவரது நண்பர், உதவியாளர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் சென்னை அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.