
பாட்னா,
7-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. போட்டியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். மே.15-ம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 28 விளையாட்டுகள் இடம் பெறுகிறது.
பின்னர், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2036-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.நாட்டில் விளையாட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார். இதனிடையே, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடுவதாக பிரதமர் பாராட்டினார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, சூர்யவன்ஷி இளம் வயதிலேயே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றிக்குப் பின்னால் கடினமான உழைப்பு உள்ளது. மேலும் இதன்மூலம் ஒருவர் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் மலர்வார் என தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.