
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சேர்வகாரன்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 44). திருப்பூர் வீரபாண்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆனந்தி (42). இவர்களது மகள் தீக்சிதா (13). தாராபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறாள்.
நாகராஜ் தனது குடும்பத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி சம்பவத்தன்று 3 பேரும் வீட்டில் இருந்து மொபட்டில் தாராபுரம் வந்து அங்குள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் மொபட்டை நிறுத்தி விட்டு திருநள்ளாறு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் நேற்று அதிகாலை பஸ்சில் தாராபுரம் திரும்பினர்.
பின்னர் இருசக்கர வாகன நிறுத்தத்தில் இருந்து மொபட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து 3 பேரும் சேர்வகாரன்பாளையம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். மொபட்டை நாகராஜ் ஓட்டினார். அவருக்கு பின்னால் தீக்சிதாவும், ஆனந்தியும் அமர்ந்து இருந்தனர். இவர்கள் தாராபுரம்-காங்கயம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அந்த சாலையில் குள்ளாய்பாளையத்தை அடுத்த மாந்தோப்பு பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
மேலும் அந்த பகுதியில் பாலம் அமைப்பதற்காக 15 அடிக்கு குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த குழியை சுற்றி ஒரு சிறிய தடுப்பு கூட வைக்கப்படவில்லை. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சாலையில் தோண்டப்பட்டிருந்த 15 அடி ஆழ குழிக்குள் மொபட் விழுந்து 3 பேரும் நிலை குலைந்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் குழிக்குள் உயிருக்கு போராடிக்கொண்ருந்தனர். இதையடுத்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று தீக்சிதா அபய குரல் எழுப்பினாள். ஆனால் ரத்த வெள்ளத்தில் கடுமையான வலிக்கு மத்தியில் சிறுமியின் அபயக்குரல் 15 அடிக்கு மேலே சாலையில் சென்றவர்களுக்கு கேட்கவில்லை.
விடியவிடிய 3 பேரும் உயிருக்கு போராடியுள்ளனர். பின்னர் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் குழிக்குள் இருந்து சிறுமியின் குரல் வருகிறதே என்று எட்டிப்பார்த்தபோது அங்கு மொபட்டுடன் 3 பேர் அடிபட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், பொதுமக்களும் விரைந்து வந்து அவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நாகராஜ் மற்றும் ஆனந்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காலில் பலத்த காயம் அடைந்த தீக்சிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் நாகராஜின் உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஷ் அசோக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாலை பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்ததாரர் சிவக்குமார், பொறியாளர் குணசேகரன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், மேற்பார்வையாளர் கவுதம் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.