நகரி-திண்டிவனம் அகல ரயில் பாதை திட்டத்தால் விளை நிலம், கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிப்பு: சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

2 weeks ago 2

திருத்தணி: நகரி-திண்டிவனம் அகல ரயில் பாதை திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கிராமங்கள், விவசாய நிலங்களுக்கு சென்று வர வசதியாக ரயில் பாதை அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு-ஆந்திர மாநிலங்களை இணைக்கும் வகையில், கடந்த 2004ம் ஆண்டு நகரி-திண்டிவனம் அகல ரயில்பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரியிலிருந்து-திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை வழியாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழிப்புரம் மாவட்டம், திண்டிவனம் வரை 180 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒன்றியத்தில் பா.ஜ. ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே திட்டப் பணிகளுக்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யாததால், ரயில் பாதை திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

இந்த ரயில் பாதை திட்டத்திற்காக பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனையடுத்து, நிலம் இழந்த விவசாயிகளுக்கு தெற்கு ரயில்வே சார்பில், மாநில அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கியது. இதனையடுத்து, அங்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, பணி நடைபெறும் பகுதி முழுவதும் செம்மண் கொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று வரும் சாலை துண்டிக்கப்பட்டு, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, ரயில் பாதை அமைக்கும் பகுதிகளில் ஒரு கிமீ தூரத்தில் ஒரு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விவசாய பணிகள் முடக்கம்
நகரி-திண்டிவனம் ரயில் பாதை திட்டத்திற்கு பொதட்டூர்பேட்டை அருகே, கன்னிகாபுரம் பகுதியில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்ேபாது, மாம்பழ சீசன் தொடங்கி பூக்கள் பூத்துள்ள நிலையில் செடிகளுக்கு மருந்து அடிக்கவும், பயிர் மகசூல் செய்து டிராக்டரில் எடுத்துச் செல்லவும் முடியாத நிலையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

The post நகரி-திண்டிவனம் அகல ரயில் பாதை திட்டத்தால் விளை நிலம், கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிப்பு: சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article