அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தோல்வி, வழக்குகள் என பல தடைகளை தாண்டி இந்த மகத்தான வெற்றியை எட்டி உள்ளார். 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து பதவி விலகியதில் இருந்து 2024ல் மீண்டும் அதிபர் வேட்பாளராகும் வரையிலும் டிரம்ப் ஏதாவது ஒரு வகையில் அமெரிக்காவில் செய்தியாகிக் கொண்டிருந்தார். டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில் தனது பெயரில் தனி சமூக ஊடகத்தை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், கடந்த 2021 ஜனவரி 6ம் தேதி தனது ஆதரவாளர்கள் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையை தூண்டினார். இதனால் அவர் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஒரு வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் டிரம்பை குற்றவாளியாக அறிவித்தது.
அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் வழக்கில் குற்றவாளியான ஒரே முன்னாள் அதிபர் டிரம்ப் மட்டுமே. இதுதவிர, தனது தொழிலிலும் பல முறைகேடுகள் செய்ததாக டிரம்புக்கு எதிராக 34 வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு விசாரணைகளால் நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கப்பட்டாலும் டிரம்ப் அசரவில்லை. மீண்டும் 2024 அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். பிரசார களத்தில் அவரை கொலை செய்ய 3 முறை முயற்சிகள் நடந்தன. இதில் பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் டிரம்பின் காதை துப்பாக்கி தோட்டா துளைத்துச் சென்றது. இதற்கும் டிரம்ப் அசரவில்லை. ‘மீண்டும் வருவேன், அமெரிக்காவை வலிமையாக்குவேன்’ என மக்களை கவர்ந்தார். ‘டிரம்ப் வந்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும், பணவீக்கம் அதிகரிக்கும், பிரிவினைவாதம் தலைதூக்கும்’ என கமலா ஹாரிஸ் பிரசாரம் செய்ய, ‘நாட்டின் எல்லைகளை பாதுகாப்பேன்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பேன். அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்’ என மக்களை உணர்வுப்பூர்வமாக நெருங்கினார் டிரம்ப். அமெரிக்காவில் சுமார் 1 கோடி பேர் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இதில் இந்தியர்களும் அடங்குவர். ஏற்கனவே முந்தைய ஆட்சியில் அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எல்லையில் நீண்ட சுவர் கட்டியவர் டிரம்ப். இப்பணியை மீண்டும் அவர் தொடர்வார் என அமெரிக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பார், நாட்டில் வரிகளை குறைத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்துவார், கச்சா எண்ணெய் உற்பத்தியில் கவனம் செலுத்தி, பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவார், கருக்கலைப்பு உரிமையை சட்டப்பூர்வமாக்குவது,
மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் போர்களுக்கு தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்புகளுடன் அமெரிக்க மக்கள் டிரம்புக்கு வாக்களித்து மீண்டும் அதிபராக்கி உள்ளனர். உலகில் அமைதியை கொண்டு வருவேன் என டிரம்ப் உறுதி அளித்துள்ளார். எனவே டிரம்ப் 2.0 ஆட்சி உள்நாட்டு பிரச்னைகளை அவர் எவ்வாறு கையாள்வார் என்பதை மட்டுமல்ல, உலக நாடுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதையும் உற்று கவனிக்கிறது.
வயதான அதிபர்
அமெரிக்க வரலாற்றில் மிக வயதான அதிபராக பதவியேற்க உள்ளார் டிரம்ப். கடந்த முறை 2021ல் பைடன் தனது 78வது வயதில் அதிபராக பதவியேற்றார். தற்போது சில மாத இடைவெளியில் டிரம்ப் (78) பைடன் சாதனையை முறியடிக்க உள்ளார்.
132 ஆண்டு வரலாற்றில் யாரும் பெறாத வெற்றி
அமெரிக்காவில் 132 ஆண்டுக்குப் பிறகு, 4 ஆண்டு இடைவெளி விட்டு பதவியை பிடித்த முதல் அதிபர் என்ற சாதனையை டிரம்ப் படைத்துள்ளார். அமெரிக்க அரசியலமைப்பின்படி ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது. இதுவரை 2 முறை அதிபராக இருந்தவர்கள் பெரும்பாலும் அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். டிரம்ப் 2017 முதல் 2021 வரை முதல் முறையாக அதிபராக இருந்தார். 2020ல் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது 4 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதிபராக வென்றுள்ளார். இதுபோல, கடந்த 1885 முதல் 1889 வரை அதிபராக இருந்த குரோவர் கிளேவ்லாண்ட், அடுத்த தேர்தலில் தோல்விக்குப்பிறகு, 1893ல் மீண்டும் அதிபரானார். இதன் மூலம் அமெரிக்க அரசியலில் மீண்டு வந்து சாதித்துள்ளார் டிரம்ப்.
‘நண்பரே…’ என பதிவிட்டு வாழ்த்திய பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு எனது நண்பரான டொனால்டு டிரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் முந்தைய ஆட்சியின் வெற்றிகளை நீங்கள் தொடரும் போது, இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய மற்றும் இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்களின் ஒத்துழைப்பை புதுப்பிப்பதற்கு எதிர்பார்ப்புடன் உள்ளேன். நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காகவும் நாம் ஒன்றாக பணியாற்றுவோம்’’ என்று கூறி உள்ளார்.
கருத்துக்கணிப்புகள் தோல்வி
அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஒரு பெண் கூட அதிபரானதில்லை. கடந்த 2016ல் முதல் முறையாக ஹிலாரி கிளிண்டன் பெண் வேட்பாளராக அதிபர் தேர்தலில் களமிறங்கினார். அவர் டிரம்பிடம் தோல்வி அடைந்தார். இம்முறை துணை அதிபர் கமலா ஹாரிஸ் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் டிரம்பை எதிர்த்தார். பல கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூட கமலாவுக்கே சாதகமாக இருந்தன. இதனால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர், முதல் இந்திய வம்சாவளி அதிபர் என சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை முறியடிக்கும் வகையில் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட 2 பெண்களும் தோல்வி அடைந்துள்ளனர். ஆனாலும், கமலா ஹாரிஸ் டிரம்ப்புக்கு கடும் போட்டி தந்ததன் மூலம், அரசியல் களத்தில் பெண்கள் மத்தியில் பெரும் ஊக்கமளித்துள்ளார்.
மேலவையை கைப்பற்றிய குடியரசு கட்சி
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையை டிரம்பின் குடியரசு கட்சி கைப்பற்றி உள்ளது. நேற்றைய தேர்தல் முடிவுகளி்ன் படி, செனட் சபையில் 51 இடங்களை குடியரசு கட்சியினரும், 40 இடங்களை ஜனநாயக கட்சியினரும் பெற்றுள்ளனர். ஒரு இடத்தை சுயேச்சை வேட்பாளர் பெற்றுள்ளார். 8 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதன் மூலம் எந்த மசோதாவையும் டிரம்பால் நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேற்ற முடியும்.
பாப்புலர் ஓட்டிலும் அசத்தல்
அமெரிக்காவில் வாக்காளர்கள் அளிக்கும் வாக்குகள் பாப்புலர் ஓட்டு எனப்படும். ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் எலக்டோரல் காலேஜ் (தேர்வாளர்கள் குழு) எனப்படுவர். மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 செனட் உறுப்பினர்களும் (மேலவை), மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகள் அவை (கீழவை) உறுப்பினர்களும் இருப்பார்கள். 100 செனட் உறுப்பினர்கள், 435 பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள், தலைநகர் வாஷிங்டனுக்கு 3 உறுப்பினர்கள் என மொத்தம் 538 எம்பிக்கள் இருப்பார்கள்.
இதில் ஒவ்வொரு மாகாணத்திலும் 50 சதவீதத்திற்கு மேல் எலக்ட்டோரல் வாக்குகள் பெறும் கட்சிக்கு மீதமுள்ள இடங்களும் கிடைத்து விடும். எனவே, பாப்புலர் ஓட்டுகள் அதிகமாக பெற்றாலும் எலக்டோரல் ஓட்டுகளை பெறத் தவறினால் அந்த அதிபர் வேட்பாளர் தோல்வி அடைவார். கடந்த 2016ல் ஹிலாரி கிளிண்டன் அதிக பாப்புலர் ஓட்டு பெற்றிருந்தாலும், டிரம்ப்பிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில், இம்முறை டிரம்ப் எலக்டோரல் ஓட்டுக்களை மட்டுமின்றி பாப்புலர் ஓட்டையும் கமலாவை விட அதிகம் பெற்றுள்ளார். ஜார்ஜ் புஷ்சுக்கு பிறகு (2004) 20 ஆண்டுகள் கழித்து பாப்புலர் ஓட்டு அதிகம் வென்ற குடியரசு கட்சி வேட்பாளர் என்ற பெருமையையும் டிரம்ப் பெற்றுள்ளார்.
ராகுல் காந்தி வாழ்த்து
டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்காக அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’’ என்றார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘அமெரிக்க அதிபராக நீங்கள் 2வது முறையாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகிறேன். கமலாஹாரிஸின் எதிர்கால முயற்சிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்’’ என கூறி உள்ளார்.
ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்பு விழா
அதிபர் தேர்தலில் மாகாண பிரதிநிதிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் டிசம்பர் 11ம் தேதி அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாக்களிக்க தொடங்குவார்கள். டிசம்பர் 17ம் தேதி 538 எம்பிக்களும் வாக்களித்து முடிக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் தொடங்கும் முன்பாக, வாக்குகள் எண்ணப்பட்டு, முறைப்படி அதிபர், துணை அதிபர்கள் அறிவிக்கப்படுவார்கள். ஜனவரி 20ம் தேதி புதிய அதிபராக டிரம்பும், துணை அதிபராக ஜேடி வான்சும் முறைப்படி பதவியேற்பார்கள். அதுவரையிலும் ஜோ பைடன் அதிபர் பதவியில் நீடிப்பார்.
துணை அதிபராகும் இந்திய மருமகன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதால் இந்திய வம்சாவளி பெண் உஷா வான்ஸின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகிறார். உஷா சிலுக்குரி, ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டவர். உஷாவின் தாத்தா சென்னையில் பணியாற்றியபோது, உஷாவின் அப்பா சென்னையில் பிறந்தவர். உஷாவின் பெற்றோர், 70களில் கலிபோர்னியாவின் சான்டியாகோ பகுதியில் குடியேறினர். பிறந்தது முதல் அங்கேயே வசித்து வரும் உஷா, அமெரிக்காவின் தேசிய சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். உஷா சிலுக்குரியும் ஜே.டி.வான்சும் யேல் சட்டக் கல்லூரியில் ஒரு விவாத நிகழ்ச்சியின்போது சந்தித்தனர். இவர்களுக்கு மத்தியில் காதல் ஏற்பட்டு, 2014ல் கென்டகியில் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். தற்போது உஷா – ஜே.டி.வான்ஸ் தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
வாழ்த்து தெரிவிக்காத புடின்
டிரம்புக்கு பல உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘டிரம்புக்கு வாழ்த்து தெரிவிக்க புடின் திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எங்கள் நாட்டிற்கு எதிராக போரில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள நாட்டை நாங்கள் நட்பில்லாத நாடாக கருதுகிறோம். எனவே அமெரிக்காவும் அந்த நிலையில் தான் உள்ளது. உக்ரைன் போரால் ரஷ்யா, அமெரிக்கா உறவு மிக பலவீனமாக உள்ளது. இந்த நிலைமையை மாற்றுவது புதிய அமெரிக்க அதிபரின் கையில் இருக்கிறது’’ என்றார்.
உக்ரைனை கைவிடுவாரா?
டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யா, உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு முற்றிலும் மாற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக போர்களில் இருந்து ஒதுங்கி நிற்பவர் டிரம்ப். அவரது முதல் ஆட்சியில் ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பேசிய டிரம்ப், ‘‘நான் அதிபராக இருந்தால், 24 மணி நேரத்தில் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்’’ என கூறியிருந்தார். அதோடு, உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி செய்யும் வரையிலும் போர் ஓயாது என கூறியிருந்த டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாராட்டி பேசியிருந்தார். இதனால், உக்ரைனுக்கான ஆயுத மற்றும் நிதி உதவியை அமெரிக்கா கணிசமாக குறைக்கலாம். டிரம்ப் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த உக்ரைன் அதிபர், ‘‘உக்ரைனில் அமைதியை மீட்டெடுப்பார் டிரம்ப்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரான் கரன்சி வரலாற்று சரிவு
அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே, ஈரான் நாட்டின் கரன்சியான ரியால் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு 7 லட்சத்து 3 ஆயிரமாக சரிந்தது. கடந்த 2015ல், அமெரிக்காவுடன் ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொண்ட போது ஒரு டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 32,000 ஆக இருந்தது. டிரம்ப் முதல் முறை அதிபரான போது 2018ல் இந்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறுவதாக அறிவித்தார். அப்போதில் இருந்து இப்போது வரையிலும் அமெரிக்கா, ஈரான் உறவு சீர்குலைந்துள்ளது. மீண்டும் டிரம்ப் வந்திருப்பது ஈரானுக்கு அவ்வளவு நல்ல செய்தியானது அல்ல என வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்பும் ஈரானின் முயற்சி தவிடுபொடியாகி உள்ளது. ஈரான் அரசின் செய்தித்தொடர்பாளர் மொஹஜெரானி கூறுகையில், ‘‘அமெரிக்காவில் யார் அதிபராக வந்தாலும், ஈரான் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இருக்காது. இரு நாடுகளுக்கு இடையிலான பொதுக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை’’ என்றார்.
பாலஸ்தீனத்தை தவிக்க விட்டவர்
பாலஸ்தீன விவகாரத்தில் முற்றிலும் முரணான கொள்கையை கையிலெடுத்தவர் டிரம்ப். முந்தைய அமெரிக்க அதிபர்கள் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்த முயன்ற நிலையில், டிரம்ப் ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலை ஆதரித்தார். அவரது முந்தைய ஆட்சியில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக தன்னிச்சையாக அங்கீகரித்தார். இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் முன்னின்று முடித்து வைத்தார். இதன் விளைவுதான் காசா முனையில் பாலஸ்தீன மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஹமாசின் ஆயுத போராட்டம் தீவிரமடைந்தது.
இப்போது மீண்டும் டிரம்ப் அமெரிக்க அதிபராகி இருப்பது மத்திய கிழக்கில் போர் சூழலை மேலும் தீவிரமாக்க வாய்ப்புள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘‘வரலாற்றின் தலைசிறந்த திருப்பம்’’ என டிரம்ப் வருகையை பாராட்டி உள்ளார். இதனால் காசாவிலும், லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதல் மூர்க்கமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனம் குறித்து டிரம்ப் எடுக்கும் முடிவை பொறுத்தே அவரை மதிப்பிடுவோம் என ஹமாஸ் கூறியுள்ளது.
3 மனைவி, 5 குழந்தைகள்
நியூயார்க்கில் உள்ள குயின்சில் 1946ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ப்ரெட் டிரம்ப், மேரி தம்பதியின் 4வது மகனாக பிறந்தவர் டெனால்டு ஜான் டிரம்ப். 1968ல் பென்சில்வேனியா பல்கலைக்கழக வார்டன் பள்ளியில் நிதியியல் பட்டம் பெற்றார். 1971ல் தனது தந்தையின் நிறுவனத்தை எடுத்துக் கொண்ட டிரம்ப் அதை டிரம்ப் குழுமம் என பெயர் மாற்றினார். குறுகிய காலத்திலேயே ஓட்டல்கள், ஓய்வு விடுதிகள், குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள், கேசினோக்கள், கோல்ப் மைதானங்கள் என டிரம்ப்பின் தொழில் சாம்ராஜ்ஜியம் விரிவடைந்தது.
கடந்த 1977ல் செக் நாட்டு தடகள வீராங்கனையும் மாடலுமான இவானா ஜெல்னிக்கோவாவை டிரம்ப் மணந்தார். ஆனால் 1990ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் என 3 குழந்தைகள் உள்ளனர். பின்னர், நடிகை மார்லா மேப்பிள்சை 1993ல் திருமணம் செய்த டிரம்ப் 1999ல் விவாகரத்து செய்தார். அவர்களுக்கு டிப்பனி என்ற குழந்தை உள்ளது. டிரம்பின் தற்போதைய மனைவி மெலனியாவை கடந்த 2005ல் திருமணம் செய்து கொண்டார். மெலானியா, முன்னாள் ஸ்லோவேனிய மாடல். இவர்களுக்கு பரோன் வில்லியம் டிரம்ப் என்ற மகன் உள்ளார்.
ஹாலிவுட்டே சப்போர்ட் செஞ்சும் கமலா தோல்வி
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஹாலிவுட் நடிகர், நடிகைகள், பாடகிகள் ஆதரவு அளித்தனர். உலகப்புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகிகள் டெய்லர் ஷிப்ட், லேடி காகா, பியான்சே, ராப் பாடகர் எமினெம், நடிகர்கள் ஹாரிசன் போர்ட், லியனார்டோ டிகாப்ரியோ, நடிகைகள் ஜெனிபர் லோபஸ், சாரா ஜெசிகா பார்க்கர் தொடங்கி அனைத்து பிரபலங்களும் கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவை அள்ளிக் கொடுத்தனர். ஆனால் பலன் இல்லை. நடிகர்களின் பக்கம் நாங்கள் நிற்கமாட்டோம் என அமெரிக்கா கூறிவிட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பெசன்ட் நகரை வீழ்த்திய அடையாறு
அமெரிக்க அதிபர் தேர்தல் டிரம்ப், கமலா ஹாரிசுக்கு இடையேயான போட்டியாக உலகெங்கும் பார்க்கப்பட்டது. ஆனால், அது சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர் இடையேயான போட்டி என்பது தமிழ்நாட்டு கோணம். காரணம் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், சென்னை பெசன்ட் நகரில் வசித்த தனது தாத்தா கோபாலனை பார்க்க பல முறை வந்துள்ளார். குடியரசு கட்சி சார்பில் டிரம்புடன் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவர் ஜெ.டி.வான்ஸ் இவரது மனைவி உஷா சிலுகுரியின் தந்தை ராதாகிருஷ்ணா சென்னை அடையாறில் உள்ள ஐஐடி வளாகத்தில் பிறந்து வளர்ந்து கல்லூரி காலம் வரை வாழ்ந்தவர். அமெரிக்காவில் பிறந்த உஷா சிலுகுரி யேல் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற ஜே.டி.வான்சை கடந்த 2014ல் திருமணம் செய்துள்ளார். அதிபர் தேர்தல் முடிவுகள் வௌியாகி உள்ள நிலையில், பெசன்ட் நகரை அடையாறு தோற்கடித்துவிட்டது. யார் வென்றாலும் சரி அது சென்னையின் வெற்றிதான் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
The post தோல்வி, வழக்கு, கொலை முயற்சி தடைகளை தாண்டி சாதித்த டிரம்ப்: இனி என்ன செய்யப் போகிறார்? appeared first on Dinakaran.