ஊட்டி, மே 21: ஆண்டுதோறும் கோடைகாலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக சம வெளிப்பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம், குன்னூர் வழித்தடத்தில் ஊட்டிக்கு வருவது வாடிக்கை. இதனால் இரு மார்க்கத்திலும் வாகனங்கள் அதிக அளவு செல்லும் நிலையில் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும், இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதங்களில் இவ்வழிதடத்தை ஒருவழி பாதையாக மாற்றுவது வாடிக்கையாக உள்ளது. இம்முறையும் கடந்த 1-ம் தேதி முதல் ஊட்டியில் இருந்து கீழ் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோத்தகிரி வழித்தடத்தில் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் தற்போது கோத்தகிரி வழித்தடத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஊட்டியில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நேரடியாக கோத்தகிரி சென்று அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்று விடுகின்றனர். மஞ்சூர் மற்றும் அதனை சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் முள்ளி, காரமடை வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் கோவையை சென்று அடைகின்றனர். இதனால், இவர்களுக்கு பெரிதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதே சமயம் குன்னூர் பகுதியில் உள்ள மக்கள் மேட்டுப்பாளையம் செல்ல வேண்டுமானால் கட்டாயம் கோத்தகிரி சென்று அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்று மற்ற பகுதிகளை அடைய வேண்டிய நிலை உள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் குன்னூர் பகுதி மக்கள் பர்லியார் வழித்தடத்தை பயன்படுத்த கோடை காலங்களில் காவல்துறை மூலம் ஒரு அடையாள அட்டை வழங்கப்படும்.
அதனை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் பகல் நேரங்களில் காட்டேரி வழித்தடத்தை பயன்படுத்துவார்கள். ஆனால், இம்முறை அதுபோன்று அடையாள அட்டை வழங்கப்படாத நிலையில் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் இவர்களுக்கு நேரம் அதிகமாவது மட்டுமின்றி எரிபொருள் செலவும் அதிகமாகிறது. எனவே, உள்ளூர் மக்களின் நலன் கருதி குன்னூர் பகுதியில் உள்ள வாகனங்கள் மட்டும் காட்டேரி வழித்தடத்தில் பகல் நேரங்களில் செல்ல அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். குறிப்பாக, சிறிய ரக வாகனங்களான கார்களை மட்டும் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
The post காட்டேரி வழித்தடத்தில் குன்னூர் பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் செல்ல அனுமதிக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.