கோவை, மே 21: கோவையில் தனியாக வசிக்கும் 1,300 முதியவர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவும் செயலி வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் ஈரோடு சிவகிரியில் அடுத்தடுத்து தோட்டத்து வீடுகளில் வசிக்கும் முதியவர்கள் கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலையில் தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டு தற்போது நகைக்கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், போலீசார் கோவையில் தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பு கருதி கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது: கோவையில் துடியலூர், வடவள்ளி, சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 1,300 முதியவர்கள் தனியாக வசிப்பதாக கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களின் பாதுகாப்பில் காவல் துறை முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்தந்த காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் பீட் போலீசார் நியமிக்கப்பட்டு முதிய தம்பதிகள் வசிக்கும் வீடுகளில் அவர்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், காவல் உதவி மையம் என்ற செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதிய தம்பதிகளுக்கு பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்து கொண்டால், ஏதேனும் ஆபத்தில் சிக்கினால் செல்போனை வேகமாக 3 முறை அசைத்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு செல்லும்.
அந்த நம்பரை போலீசார் தொடர்பு கொண்டு விவரம் கேட்பர். தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் செல்போன் அழைப்பு லொக்கேஷனை வைத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏதேனும் அசாம்பாவிதம் என்றால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கை காவல் துறை சார்பில் எடுக்கப்படும். இதேபோல், இந்த ஆண்டில் மட்டும் சுமார் 179 புகார்கள் வந்துள்ளன. இந்த காவல் உதவி மைய செயலியை 25 ஆயிரம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். மக்கள் தங்களது வீடுகளில் சிசிடிவி கேமரா, பர்குலர் அலாரம் பொருத்த வேண்டும் என்று காவல்துறை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தனியாக வசிப்பவர்களை பாதுகாக்க காவல் துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மாநகரில் தனியாக வசிக்கும் 1,300 முதியவர்கள் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.