
மும்பை,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை முறிவு காரணமாக எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மகேந்திரசிங் தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
43 வயதான தோனியின் தலைமையில் சென்னை அணி 5 முறை கோப்பையை உச்சிமுகர்ந்து சாதனை படைத்திருக்கிறது. ஆனால் இந்த முறை தோனிக்கு உண்மையிலேயே கடும் சவால் காத்திருக்கிறது.
இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 4-ல் தோற்றுள்ள சென்னை அணி எஞ்சிய 9 ஆட்டங்களில் குறைந்தது 7-ல் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவது குறித்து நினைத்து பார்க்க முடியும். அந்த சூழலில் சென்னை அணி இன்று கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடி வருகிறது.
இந்நிலையில் கெய்க்வாட் காயத்தால் விலகியுள்ளது வருத்தமான விஷயம் என்று சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய அனுபவம் மற்றும் கேப்டன்ஷிப் பண்புகளால் தோனி இங்கிருந்து சென்னை அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்வார் என்று ராயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் ஐ.பி.எல்.-ல் இருந்து விலகியது மிகவும் வருத்தமளிக்கிறது. ஆனால், தோனி மீண்டும் சென்னை அணியை வழிநடத்துவதை பார்க்க அனைத்து ரசிகர்களும் நிச்சயமாக மிகவும் உற்சாகமாக இருப்பார்கள். அவர் இப்போதும் தனது மாயாஜாலத்தை வெளிப்படுத்தி சென்னையை இங்கிருந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறச் செய்வார். இது ஒரு சிறந்த கதையாக இருக்கும். எனவே, நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்" என்று கூறினார்.