தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா..? ஒற்றை வரியில் பதிலளித்த ஸ்டீபன் பிளெமிங்

3 hours ago 2

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.

நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கடைசி இடத்தை தவிர்த்து விடலாம் என்ற சூழலில் களமிறங்க உள்ளது.

முன்னதாக நடப்பு சீசனில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயத்தில் விலகியதால் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மகேந்திரசிங் தோனி (வயது 43) அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்பது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஏனெனில் சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனான சாதனை படைத்த தோனி தனது கடைசி ஐ.பி.எல். போட்டியை சென்னையில்தான் நிறைவு செய்வேன் என்று முன்பு கூறியிருந்தார்.

இதனால் அவர் அடுத்த சீசனில் விளையாடுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்புகின்றனர். இருப்பினும் நடப்பு சீசனில் பின்வரிசையில் களமிறங்கியதால் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்த அவர் ஓய்வு பெற்று விடுவார் என்று ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிளெமிங், "எனக்கு தெரியாது" என்று ஒற்றை வரியில் பதிலளித்தார்.

Read Entire Article