*ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
திருவண்ணாமலை : தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட மாவட்டமாக திருவண்ணாமலையை மாற்ற அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மலர்விழி, மாவட்ட சுகாதார அலுவலர் பிரகாஷ், துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) கார்த்திக், மாநகராட்சி சுகாதார அலுவவலர் வீராசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை தொடங்கி வைத்து, கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்ததாவது: ஒரு வகை பாக்டீரியாவால் தொழுநோய் பரவுகிறது, அதை எளிதில் குணப்படுத்த முடியும் என்பதை மக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தின் நோக்கமாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி 30ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
எனவே, வரும் 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது. அதையொட்டி, அனைத்து நகர்புறம், கிராம ஊராட்சிகள் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகளிலும் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்படும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், சந்தைகள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறியும் பணிகள் குறித்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சிவந்த, வெளிர்ந்த, உணர்ச்சியற்ற தேமல், கை கால்களில் மதமதப்பு போன்ற அறிகுறி உள்ளவர்களை கண்டறியும் இந்த கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட மாவட்டமாக திருவண்ணாமலையை மாற்ற அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வீடு வீடாக தொழுநோய் கண்டறியும் பணி
தொழுநோய் பாதிப்பு அதிகம் காணப்படுவதாக மத்திய- மாநில அரசுகளால் அறிவுறுத்தப்பட்டுள்ள காட்டாம்பூண்டி, வாணாபுரம், மேல்பள்ளிப்பட்டு, தச்சூர், தெள்ளாறு, வழூர், பெருங்கட்டூர் ஆகிய 7 சுகாதார வட்டாரங்களிலும், திருவண்ணாமலை நகர பகுதியிலும் தொழுநோய் கண்டறியும் பணி அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை வீடு வீடாக தன்னார்வலர்கள் மூலம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
The post தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட மாவட்டமாக திருவண்ணாமலையை மாற்ற அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் appeared first on Dinakaran.