திருநெல்வேலி: திருநெல்வேலியில் 11 நாட்கள் நடத்தப்பட்ட நெல்லை பொருநை 8-வது புத்தக திருவிழாவுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்திருந்தது. பல்வேறு புதுமுயற்சிகளை கையாண்ட போதிலும்
கடந்த ஆண்டைவிட இம்முறை ரூ.20 லட்சம் மதிப்புக்கு புத்தக விற்பனை குறைந்திருந்தது. இதனால் வெளியூர்களில் இருந்து இங்குவந்து தங்கி புத்தக விற்பனையில் ஈடுபட்டவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி எதிரேயுள்ள வர்த்தக மையத்தில் நெல்லை பொருநை 8-வது புத்தக திருவிழா கடந்த 31-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி நிறைவடைந்தது. இந்த புத்தக திருவிழாவில், 120-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த புத்தக திருவிழாவுக்கு மாணவ, மாணவியரையும், பொதுமக்களையும் வரவழைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தன. பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு இலவசமாக உண்டியல்கள் வழங்கப்பட்டிருந்தன.