
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் ஸ்ரீசைலம் அணை உள்ளது. இந்த அணையில் புதிதாக சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அணையில் உள்ள தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவை சரிசெய்ய நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் 8 பேர் சுரங்கத்திற்குள் சென்றுள்ளனர்.
தொழிலாளர்கள் தங்கள் பணியை செய்துகொண்டிருந்தபோது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 8 தொழிலாளர்களும் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசார், தீயணைப்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த இடத்தை தெலுங்கானா மந்திரி கிருஷ்ண ராவ் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "உண்மையை சொல்லவேண்டும் என்றால், சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக மிக குறைவு. ஏனென்றால், நான் சுரங்கம் இடிந்த 50 மீட்டர் பகுதி வரை சென்றேன். நாங்கள் அதனை புகைப்படம் எடுத்தபோது, சுரங்கத்தின் முடிவே தெரியவில்லை.
மேலும் சுரங்கப்பாதையின் 9 மீட்டர் விட்டத்தில், கிட்டத்தட்ட 30 அடி வரை சேறு குவிந்துள்ளது. நாங்கள் அவர்களின் பெயர்களை சொல்லி சத்தமாக அழைத்தும் பார்த்தோம். எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை." என்று தெரிவித்தார்.