
சென்னை,
தர்மபுரி மாவட்டம், வெதரம்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக திடீரென பட்டாசுக்கள் வெடிக்கத் தொடங்கின. இந்த வெடி விபத்தால் தீ அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் அங்கு வேலை செய்த 3 பெண்கள் வெடி விபத்தில் சிக்கி பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் இரங்கல் தெரிவித்ததோடு, தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (24.02.2025) பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமம், பூமிசமுத்திரத்தைச் சேர்ந்த மலர் (வயது 38) க/பெ. விஜயகுமார், செண்பகம் (வயது 35) க/பெ.மேகநாதன் மற்றும் மஞ்சு (வயது 33) க/பெ. தியாகு ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.