தொழிலதிபர் அதானியை அலற விட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் திடீர் மூடல்: நிறுவனர் ஆண்டர்சன் அறிவிப்பால் பரபரப்பு

4 hours ago 2

புதுடெல்லி: பங்கு முதலீடு மோசடிகளை ஆய்வு செய்யும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2017ல் தொடங்கப்பட்டது. 40 வயதான நேட் ஆண்டர்சன் இதன் நிறுவனர். இந்நிறுவனம் பங்குச்சந்தையில் மோசடி செய்த பல சர்வதேச நிறுவனங்களின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், கடந்த 2023 ஜனவரியில் அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடியை செய்ததாகவும், குழுமத்தின் பங்குகளை செயற்கையாக உயர்த்த வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மூலம் முறையற்ற வணிக நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. சுமார் ரூ.12 லட்சம் கோடியை இழந்த அதானி, உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்து ஒரே இரவில் 20வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த விவகாரம் இந்திய அரசியலிலும் கடும் சர்ச்சையை கிளப்பியது. அதானி குழுமம் இந்திய முதலீட்டாளர்களை மோசடி செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அதானியின் முறைகேடுகளுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமும் (செபி) உதவியதாக அதன் தலைவர் மாதவி புச் மீதும் ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதனால் இந்த விவகாரம் ஒன்றிய பாஜ அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதுபோல பல பன்னாட்டு நிறுவனங்களை ஆட்டம் காண வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கலைக்கப்பட இருப்பதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் நேற்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு இறுதியில் எனது குடும்பத்தினர், நண்பர்கள், சக குழுவினரிடம் ஆலோசித்தபடி ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளேன். எங்களது பணிகள் முடிந்ததும் நிறுவனத்தை மூட முடிவு செய்தோம். அதே போல, நிதி முதலீடு முறைகேடு தொடர்பான எங்களின் கடைசி பணி முடிந்து அறிக்கையை சமர்பித்து விட்டோம். இந்த முடிவு எந்த அழுத்தத்தின் காரணமாகவும், தூண்டுதல், உடல் நல பாதிப்பு காரணமாக எடுக்கப்படவில்லை. நிறுவனத்தின் மீதான அக்கறையால் வாழ்க்கையில் பல விஷயங்களை நான் இழந்திருப்பதை உணர்கிறேன். எனவே ஹிண்டன்பர்க்கை என் வாழ்க்கையில் ஒரு அத்தியாயமாக பார்க்க விரும்புகிறேன்.

அடுத்த 6 மாத காலம் எங்கள் நிறுவனம் எப்படியெல்லாம் ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்தது என்பது தொடர்பான ஆவணங்கள், வீடியோக்களை வெளியிட உள்ளேன். இது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். நாங்கள் மேற்கொண்ட பணியால் சுமார் 100 தனிநபர்கள் சிவில், கிரிமினல் வழக்குகளை சந்தித்துள்ளனர். எங்களை அசைக்க வேண்டும் என்று நினைத்த சில பெரும் பணக்காரர்களையும் நாங்கள் அசைத்தோம். இவ்வாறு அவர் கூறினார். தனது நிறுவனத்தை திடீரென மூடுவதற்கான காரணத்தை ஆண்டர்சன் வெளிப்படையாக கூறவில்லை. ஹிண்டன்பர்க் மூடுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து நேற்று அதானி குழும பங்குகள் 9% வளர்ச்சியை கண்டன.

* பணிபுரிந்தது 11 பேர் மட்டுமே
உலகையே கதறவிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை வெறும் 11 மட்டுமே. இந்த 11 பேர் தான் அத்தனை ஆய்வுகளையும் செய்து பல திருட்டுத்தனங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். தற்போது தனது புத்திச்சாலி 11 ஊழியர்களின் எதிர்காலத்தை அவர்கள் விருப்பப்படி அமைத்து தருவதே தனது முதல் வேலை என ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சன் கூறி உள்ளார். ஹிண்டன்பர்க் போன்ற ஆய்வு நிறுவனத்தை தொடங்க அவர்கள் விரும்பினால் உதவுவேன் என கூறி உள்ள அவர், அந்நிறுவனத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

* லாபம் கிடைக்காமல் கலைத்திருக்கலாம்
ஹிண்டன்பர்க் என்பது ஷார்ட் ஷெல்லர் நிறுவனமாகும். அதாவது, பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரியும் என கணித்து, அதன் பங்குகளை இவர்கள் கடனாக வாங்கி மற்றொரு முதலீட்டாளரிடம் விற்று விடுவார்கள். அந்த பணத்தை வைத்து, பங்கு விலை சரிந்ததும், கடன் வாங்கிய பங்குகளுக்கு ஈடான பங்கை குறைந்த விலைக்கு வாங்கி விடுவார்கள். பின்னர் ஓரிரு மாதங்களில் அந்த பங்கின் விலை பழையபடி அதிகரித்ததும் தங்களிடம் உள்ள பங்கை விற்று லாபம் பார்ப்பார்கள். இதே போல அதானி குழுமம் பற்றி குற்றம்சாட்டியதும் அதன் பங்குகள் சரிந்தன.

அப்போது ஹிண்பன்பர்க் மூலம் பங்குகள் வாங்கப்படும். பின்னர் சில மாதத்தில் பழைய நிலை திரும்பியதும் அதிக விலைக்கு விற்று விடுவார்கள். இப்படி பங்குகள் விலை குறைவதற்காக குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் பரபரப்பு அறிக்கை வெளியிடும். ஆனால் சில சமயம் இது எதிர்மறையாக நடக்கும் போது பயங்கர நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால், ஷார்ட் ஷெல்லர்களுக்கு நிலையான வருமானம் இருப்பதில்லை. எனவே நஷ்டங்கள் அல்லது எதிர்பார்க்காததது நடக்காததால் ஆண்டர்சன் ஹிண்டன்பர்க்கை மூடியிருக்கலாம் எனவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

The post தொழிலதிபர் அதானியை அலற விட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் திடீர் மூடல்: நிறுவனர் ஆண்டர்சன் அறிவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article