*தோட்டக்கலைத்துறை நடவடிக்கை
ஊட்டி : ஊட்டி அருகே தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் விரிவாக்க பணிகளை தோட்டக்கலைத்துறையினர் துவக்கினர். நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் அதிகளவு உள்ளன. ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளது. குன்னூரில் காட்டேரி பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகியவை உள்ளன. தொட்டபெட்டா அருகில் தேயிலை பூங்கா ஆகியவை உள்ளன.
இந்த பூங்கா பூங்காவிற்கு நாள்தோறும் பல ஆயிரம் சென்று வருகின்றனர். இதனால், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பூங்காக்களில் ஆண்டு தோறும் பல்வேறு மேம்பாட்டு பணிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேயிலை பூங்காவில், அழகான தேயிலைத் தோட்டம், புல்வெளிகள், தேயிலை தோட்டங்களுக்கு நடுவே அழகிய இருக்கைகள் கொண்ட நிழற்குடைகள், விளையாட்டு சாதனங்கள் என பல்வேறு வசதிகள் உள்ளன. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதேபோல், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள புல் மைதானங்களில் விளையாடியும் மகிழ்கின்றனர்.
இந்த பூங்காவில் பல்வேறு அலங்கார நாற்றுகள், மலர் நாற்றுகள், பழ மரக்கன்றுகள் மற்றும் தேயிலை நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. மேலுமு், இப்பூங்காவில் கிரீன் டீ உற்பத்தி செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், இந்தப் பூங்காவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நர்சரி அமைக்கப்பட்டிருந்தது. அதில், பல்வேறு மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. அந்த இடத்தில் தற்போது பூங்கா விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிமட்ட முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில், புதிதாக பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதில், சிறு சிறு புல் மைதானங்களும், அதன் ஓரங்களில் அலங்காரம் மலர் செடிகளும் நடவு செய்யப்பட உள்ளது.
மேலும், ஆங்காங்கே மலர் செடிகளும் நடவு செய்யப்பட உள்ளன. இது தவிர இந்த புல் மைதானங்களில் நடுவே இருக்கைகள் அமைத்து சுற்றுலாப் பயணிகள் அமரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த புல் மைதானங்களில் நடுவே அலங்கார நடைபாதைகளும் அமைக்கப்பட உள்ளது.
இது தேயிலை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைய வாய்ப்புள்ளது. இதற்கான பணிகள் துவங்கி தற்போது வேகமாக நடந்து வருகிறது. வரும் கோடை சீசனுக்குள் இப்ப பணிகளை முடித்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் தேயிலை பூங்கா நிர்வாகம் பணிகளை வேகப்படுத்தி உள்ளது.
The post தொட்டபெட்டா தேயிலை பூங்கா விரிவாக்க பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.