தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி உதிரிதான்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கு

5 hours ago 2

பெரம்பூர்: தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவரும் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு உதிரிதான் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாதவரம் நெடுஞ்சாலை ஜமாலியா பகுதியில் நடைபெற்றுவரும் புதிய குடியிருப்பு பணிகள், ராஜா தோட்டத்தில் நடைபெற்றுவரும் புதிய குடியிருப்பு திட்டப்பணிகள், கொளத்தூர் பேப்பர் மில் சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டுவரும் நவீன சந்தை,புதிய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் இன்று காலை ஆய்வு செய்தனர். இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் சுமார் 6,039 கோடி மதிப்பீட்டில் 82 பணிகள் தமிழக முதலமைச்சரால் வடிவமைக்கப்பட்டு நடைபெறுகிறது. அந்த பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டிய பணிகளை பற்றி ஆலோசனை செய்து வருகிறோம். சென்னை பெருநகர குழுமத்தின் 975 கோடி மதிப்பீட்டில் 45 பணிகள் நடைபெறுகிறது.

கொளத்தூர் தொகுதியில் மக்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் கட்டமைப்புகளான சார்பதிவாளர் அலுவலகம் அத்துடன் இணைந்து வட்டாட்சியர் அலுவலகம், படிப்பகம் உருவாக்குகின்ற முயற்சியாக 40 கோடி செலவில் அமைய உள்ளது. நடைபெறுகின்ற பணிகள் தரமாகவும் குறிப்பிட்ட காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக இந்த ஆய்வு நடைபெறுகிறது. வடசென்னை வளர்ச்சி என்பது முதலமைச்சரின் கனவாக இல்லாமல் நினைவாக இருக்கும். அதிமுக ஏற்கனவே ஒழிந்துகொண்டிருக்கிற கட்சி. அந்த கட்சியை முழுமையாக எடப்பாடி பழனிசாமி ஒழித்துவிட்டார். எடப்பாடி பழனிசாமியை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை, உதிரியாகத்தான் பார்க்கிறோம். அதிமுக பொதுச்செயலாளராக அவர் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக மக்கள் அவருக்கு கொடுத்தது தோல்விதான். அதே நேரத்தில் எங்கள் தலைவர் பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கு மக்கள் வெற்றியை மட்டுமே பரிசாக கொடுத்து வருகிறார்கள். அதனால் 2026ல் பலமான இந்த கூட்டணி 200 அல்ல அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும். அதை நாளைய சரித்திரம் சொல்லும். இவ்வாறு கூறினார்.

 

The post தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி உதிரிதான்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article