
தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வார விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகை ஆகிய தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். அங்கு பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள், ஆயில் மசாஜ் செய்து, பிரதான நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், மீனவர்கள், வியாபாரிகள் ஆகியோர் தங்களுக்கு வருவாய் அதிகரித்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.