
மும்பை,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை தரப்பில் ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 8 லீக் ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்னும் 6 ஆட்டங்களே எஞ்சி உள்ளதால் சி.எஸ்.கே. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா? என கேள்வி எழும்பி உள்ளது.
இந்நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற சி.எஸ்.கே-வுக்கு வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். சி.எஸ்.கே அணிக்கு இன்னும் 6 போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இந்த ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சி.எஸ்.கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இதன் மூலம் இனி வரும் அனைத்து போட்டிகளும் சி.எஸ்.கே அணிக்கு வாழ்வா? சாவா? என்று மாறிவிட்டது.
அடுத்த மூன்று போட்டிகள் சி.எஸ்.கே அணிக்கு மிகவும் முக்கியமானவை. வரும் வெள்ளிக்கிழமை சி.எஸ்.கே அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. அதன் பிறகு வரும் 30-ம் தேதி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் சென்னையில் நடைபெறுகிறது. அதன் பிறகு மே 3-ம் தேதி பெங்களூருவில் ஆர்.சி.பி அணியை சி.எஸ்.கே எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளிலும் சி.எஸ்.கே அணி வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்.
ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. சி.எஸ்.கே அணியை போல் ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளும் நான்கு புள்ளிகளுடன் முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தற்போது சி.எஸ்.கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் அனைத்து போட்டிகளும் கட்டாய வெற்றி மட்டுமின்றி, ரன் ரேட்டையும் கவனத்தில் கொண்டு வெல்ல வேண்டும்.
ஒருவேளை சி.எஸ்.கே சில ஆட்டங்களில் தோல்வி கண்டால் பிற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். தற்போது பாதி தொடர் நிறைவடைந்துள்ளதால் இந்த முறை சி.எஸ்.கே. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் தான்.