தொடர் தோல்விகளுக்கு காரணம் என்ன..? ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் விளக்கம்

3 hours ago 2

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கிளாசென் 71 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 146 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 70 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் அடித்தனர்.

8-வது லீக்கில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 6-வது தோல்வியாகும். இதனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அந்த அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பு சீசனில் இப்படி தொடர் தோல்விகள் சந்தித்து வருவதற்கான காரணம் குறித்து மும்பைக்கு எதிரான போட்டிக்குப்பின் ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில், "அபினவ் மற்றும் கிளாசென் ஆகியோர் எங்களுக்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். ஆனால் எங்களால் அந்த இன்னிங்சை நன்றாக விளையாட முடியவில்லை. நங்கூரமாக நிலைத்து விளையாடக்கூடிய வீரர் எங்களுக்கு தேவை.

இந்த பிட்ச்சில் நீங்கள் உங்களுடைய இன்னிங்சை கட்டமைக்க வேண்டும். அதற்கு ஆரம்பத்தில் சில பந்துகளை நிதானமாக எதிர்கொண்டால் பின்னர் அதிரடியாக விளையாடலாம். முதல் போட்டியில் இங்கே நாங்கள் 280+ ரன்கள் அடித்து வென்றோம். பின்னர் அதே பிட்ச்சில் நாங்கள் தடுமாறினோம்.

டி20 கிரிக்கெட்டில் வெற்றி இடைவெளை மிகவும் சிறியதாக இருக்கும். எனவே நீங்கள் கொடுக்கப்பட்ட நாளில் சிறப்பாக விளையாட வேண்டும். எங்களுக்கு வெளியூர்களில் சில போட்டிகள் இருக்கின்றன. அதில் முடிந்தளவுக்கு வேகமாக ஒவ்வொரு பிட்ச்சையும் படிப்பது அவசியம். சில நாட்களில் எங்களுடைய பேட்டிங் ஆல் அவுட்டாகக்கூடியதாக இருக்கும். சில நாட்களில் அது எங்களுடைய விருப்பங்களை மதிப்பிடுவது பற்றியதாகும்" என்று கூறினார்.

Read Entire Article