தொடர் கனமழையால் டிஎம் நகரில் வெள்ளம்; சீரமைப்பு பணிகளில் மாநகராட்சி தீவிரம்: தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

1 month ago 5

மதுரை, அக். 15: கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மதுரை மாநகராட்சியின் 9வது வார்டில் உள்ள மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே டிஎம் நகர் பகுதியின் 20க்கும் மேற்பட்ட தெருக்கள், மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பாலமேடு அருகே உள்ள சாத்தையார் அணையில் தொடங்கி, வண்டியூர் கண்மாய் வரை 129 கண்மாய்கள் உள்ளன. கனமழையில் இக்கண்மாய்களில் பலவும் நிரம்பி, உபரி நீர் ஓடைகளில் வெளியேறி கால்வாய்கள் வழியாக வைகை ஆற்றில் வந்து சேரும். இந்நிலையில், அக்.12ம் தேதி இரவு கொட்டிய கனமழையால் டிஎம் நகர் பகுதியில் உள்ள சாத்தையார் அணை ஓடையில் இருந்து வண்டியூர் கண்மாய்க்கு செல்லும் தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

டிஎம் நகரில் வீட்டைச்சுற்றியும், தெருக்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், வாகனங்களை வெளியில் எடுக்க முடியவில்லை. எனவே பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரையும் மதுரை மாநகராட்சி ஏற்பாட்டின்பேரில் நேற்று ‘டிராக்டர்’ உதவியுடன் பிரதான சாலைக்கு அழைத்துச் சென்றனர். டிஎம் நகரில் உள்ள மருந்து குடோன்களில் இருந்து பொருட்களை பணியாளர்கள் நீண்ட தூரம் தோளில் சுமந்து சென்றனர். அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு முறை தொடர் மழை பெய்யும்போதும் இதே நிலை தொடர்கிறது. இதனால் நாங்கள் அச்சத்துடன் வசிக்க வேண்டியதாக இருக்கிறது. இதற்கு தீர்வாக கால்வாயில் தடுப்புச்சுவரை முறையாக அமைக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் கூறியதாவது: சாத்தையார் ஓடை நீரால் டிஎம் நகர் குடியிருப்பு மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்ததும், குடியிருப்போர் சங்கத்தினருடன் இணைந்து பணிகளை துரிதப்படுத்தினோம். ஓடையில் நீர் வரத்து அதிகரித்ததால், வண்டியூர் கண்மாயிலிருந்தும் வைகையாற்றுக்கு கூடுதல் நீர் திறந்து விடப்பட்டது. டிராக்டர், பொன்லைன் மற்றும் மணல் மூட்டைகளுடன் மாநகராட்சி பணியாளர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். மாநகரில் வெள்ள பாதிப்பை தவிர்க்கும் வகையில் பனையூர், அனுப்பானடி, பந்தல்குடி கால்வாய்கள் முன்னதாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

லட்சுமிபுரம், கான்சாபுரம் பகுதிகளில் பாதிப்பை தடுக்க, அனுப்பானடி கால்வாயில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டது. அனுப்பானடி வாய்க்காலை வாழைத்தோப்பு ரயில்வே தண்டவாள பகுதியிலும் சீரமைத்துள்ளோம். நகரின் அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வைகயில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.

The post தொடர் கனமழையால் டிஎம் நகரில் வெள்ளம்; சீரமைப்பு பணிகளில் மாநகராட்சி தீவிரம்: தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article