பொங்கலுக்கு பின்பு பொலிவிழந்த ஜவுளி நிறுவனங்கள் வெளி நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்தது:200 கோடி ஜவுளிகள் தேக்கம்

21 hours ago 1

குமாரபாளையம்: மிதமிஞ்சிய துணி உற்பத்தியால், பொங்கல் பண்டிகைக்கு பிறகும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பொலிவிழந்துள்ளன. இதனால், சுமார் 200 கோடி மதிப்பிலான லுங்கிகள், வண்ண வேட்டிகள், துண்டுகள் தேங்கியுள்ளன.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் இங்கு உற்பத்தியாகும் துணிகளுக்கு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு இருக்கும்.

இது தவிர ஆன்மீக பக்தர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில், பச்சை, மஞ்சள், கருப்பு, காவி போன்ற கலர் வேட்டிகள், அதே நிறத்திலான துண்டுகள் போன்றவை இங்கு அதிக அளவில் உற்பத்தியாகின்றன. குமாரபாளையம் ஆட்டையாம்பட்டி ராசிபுரம் பள்ளிபாளையம் எடப்பாடி போன்ற ஊர்களில் உற்பத்தியில் 90 சதம் உற்பத்திகள், ஈரோடு ஜவுளி மார்க்கெட் மூலம் கான்பூர், நாக்பூர் மார்க்கெட்டுகளின் தேவைகளை நிறைவு செய்யப்படும். குமாரபாளையத்தின் கலர் வேட்டிகள்தான் தமிழகம், ஆந்திரா மாநில பக்தர்களின் ஆன்மீகத்தின் ஆடைகளாகி உள்ளது.

பொங்கல் திருநாளுக்கு 15 நாட்கள் முன்பே, குமாரபாளையத்தில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் வியாபாரம் சுறுசுறுப்படைந்துவிடும். வெளியூர் வியாபாரிகள் பலர் நேரில் வந்து காத்திருந்து தங்களுக்குகான துணிகளை சொந்த ஊருக்கு சரகேற்றிகள் மூலம் அனுப்பிவிட்டு செல்வதும் உண்டு. ஆனால் இந்த ஆண்டு இங்கு பொங்கலுக்கு 15 நாட்கள் முன்பே வியாபாரம் குறைந்து, புதிய துணிகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பொங்கலை கருத்தில் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் பார்சல் போட்ட நிலையில் பரணில் அடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் முடிந்து 10 நாட்களை கடந்த பின்னரும் விற்பனைக்கு தயாராக உள்ள துணிகளை கேட்டு ஆர்டர்கள் வரவில்லை. இதனால் பெரும்பாலான விசைத்தறி பட்டறைகள் பலவும் திறக்கப்படவில்லை. அங்காங்கே ஒன்றிரண்டு இடங்களில் இயங்கும் தறிப்பட்டறைகளிலும் துணிகள் தேங்கி கிடக்கின்றன. ஜவுளி உற்பத்தி செய்யும் டெக்ஸ்டைல்களிலும் மூட்டை மூட்டையாக துணிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் மட்டும் சுமார் ₹200 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் தேங்கி முதலீடுகள் முடங்கியுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பிரபாகரன் கூறுகையில், குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியில் காட்டன் துணிகளின் உற்பத்தி குறைந்துவிட்டது. 98 சதவீதம் இங்கு பாலிஸ்டர் லுங்கிகளும் வேட்டிகளும் உற்பத்தியாகின்றன. பருத்தி விளைச்சல் குறைந்து போனதால் காட்டன் துணிகளின் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. பனியன் துணிகளின் வேஸ்டுகளில் இருந்து உற்பத்தியாகும் ஓஇ ஊடைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால், துணிகளின் உழைப்பு குறைந்துள்ளது.

காட்டன் விரும்பிகள் பலரும் பாலிஸ்டர்களை விரும்பாததால் துணிகள் விற்கமுடியாமல் தேங்கியுள்ளன. மக்களின் தேவைக்கும் நுகர்வுக்கும் பலமடங்கு அதிகமான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் கேட்பு குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்டன் துணிகள் குறைந்து போனதால் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துவிட்டது. தற்போதைய நிலை தொடர்ந்தால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், வருமான குறைவும் ஏற்படும். சிறு குறு ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பலவும் தொழில்துறையிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும். எனவே அரசும் அதிகாரிகளும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியில் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

இந்திய அளவில் ரயான் செயற்கை இழை தயாரிப்பிலும், ரயான் துணி உற்பத்தியிலும் சுமார் 80 சத முற்றுரிமையை கொண்டுள்ளது பள்ளிபாளையம். இங்குள்ள ரயான் உற்பத்தியாளர்கள் தான் இந்திய அளவில் செயற்கை இழை பஞ்சு மற்றும் நூல்கள், துணிகளின் தேவையை நிறைவேற்றி வருகின்றனர். ரயான் பஞ்சு உற்பத்தியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதமாக இங்குள்ள ஆலைகள் உற்பத்தியை குறைத்துள்ளன.

மூன்று ஷிப்ட் முறையில் இயங்கிய ஆலைகளில் ஒரு ஷிப்ட் குறைக்கப்பட்டு, சுழற்சி முறையில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் வரையில் மட்டும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி குறைப்பு, ஜனவரி கடைசியிலும் தொடர்ந்து வருகிறது. ரயான் துணிகளின் தேக்கம் காரணமாக உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதால், இந்த துறையில் உள்ள சிறு குறு ஆலைகள் தடுமாற்றத்தில் உள்ளன. தற்போதுள்ள தேக்கநிலை இன்னும் சில மாதங்கள் நீடித்தால் தள்ளாட்டத்தில் உள்ள சிறு ஆலைகள் தொழிலைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படுமென அஞ்சப்படுகிறது.

ஒன்றிய அரசு ஜவுளித்துறையில் போதிய கவனம் செலுத்தாமல் வரிகளை போட்டு வதைப்பதும், சிறு குறு நிறுவனங்களின் நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு தேவையான உதவிகள் சலுகைகள் செய்யாமல், பெரும் நிறுவனங்களின் வளர்ச்சியில் அக்கரை காட்டுவதுமே தற்போதைய தேக்கநிலைக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரிய பருத்தி ஆடைகளுக்கான மூலப்பொருளான பருத்தி விவசாயத்தை ஊக்குவிக்காமல், செயற்கை இழையான பாலிஸ்டர் நிறுவனங்களை வளர்த்து விடுதால்தான் உலக அளவில் விரும்பும் காட்டன் துணிகளின் ஏற்றுமதி குறைந்துள்ளது.

பாலிஸ்டர் துணிகளின் உற்பத்தி தேவைக்கும் அதிகமாக இருப்பதால் தேங்கி முதலீட்டாளர்களை நட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே உலக அளவில் மானம் காத்த நமது ஜவுளி உற்பத்தியாளர்களின் தொழில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு வேண்டிய நடவடிக்கை மேற்கொண்டு, இந்த தேக்க நிலையிலிருந்து உற்பத்தியாளர்களை மீட்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

 

The post பொங்கலுக்கு பின்பு பொலிவிழந்த ஜவுளி நிறுவனங்கள் வெளி நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்தது:200 கோடி ஜவுளிகள் தேக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article