தொடர் கதையாகும் விபத்துகள்; சென்டர் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி

2 hours ago 1

மார்த்தாண்டம்: நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கனிமவளங்களை ஏற்றி கொண்டு தினந்தோறும் ஏராளமான டாரஸ் லாரிகள் மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு சென்று வருகின்றன. இவ்வாறு செல்லும் டாரஸ் லாரிகள் மார்த்தாண்டம் பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்படி நேற்று இரவும் டாரஸ் லாரி ஒன்று விபத்தில் சிக்கிய நிகழ்வு நடந்துள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

கேரள மாநிலத்தில் கனிமவளங்களை இறக்கிவிட்டு டாரஸ் லாரி ஒன்று மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலை நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது தக்கலை அருகே கல்லுவிளையில் உள்ள வளைவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவமாக டிரைவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், கனிமவளங்களுடன் இயக்கப்படும் டாரஸ் லாரிகள் அதிவேகத்தில் சென்று வருகின்றன. இதனால் லாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. மேலும் டிரைவர்கள் மதுபோதையில் லாரியை ஓட்டுவதும் விபத்துக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. சரக்குகளை ஏற்றி செல்லும்போதும், இறக்கிவிட்டு வரும்போதும் பெரும்பாலான டிரைவர்கள் மதுபோதையில் தான் லாரியை ஓட்டுகின்றனர்.

இதற்கிடையே மார்த்தாண்டம், தக்கலை பகுதிகளில் உள்ள சாலைகளில் சென்டர் மீடியன்கள் வைக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்படுகிறது. சென்டர் மீடியன்கள் இல்லாமல் இருந்தால் லாரிகளால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்திவிடும். எனவே விபத்துகளை தடுக்க போலீசார் கனிமவளங்களை ஏற்றி செல்லும் லாரிகளை அவ்வப்போது நிறுத்தி டிரைவர்கள் மது அருந்தியுள்ளார்களா? என பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறு மது அருந்தியிருந்தால் டிரைவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post தொடர் கதையாகும் விபத்துகள்; சென்டர் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி appeared first on Dinakaran.

Read Entire Article