ஒன்றிய பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உள்ளது: ஒ.பன்னீர் செல்வம் வரவேற்பு

2 hours ago 1

சென்னை: “ஒன்றிய பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் விதமாக, வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாக உள்ளது” என ஒ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை, அனைத்து மக்களுக்குமான நிதிநிலை அறிக்கையாக, குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் அறிக்கையாக விளங்குகிறது.

இந்த நிதிநிலை அறிக்கை வேளாண்மை, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், முதலீடு, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஊக்குவிக்கப்பதாக அமைந்துள்ளது. நாட்டின் பருப்பு உற்பத்தியை அதிகரிக்கவும், ஆறு ஆண்டுகளில் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை அடையவும் “தன் தான்ய க்ரிஷி” திட்டம்; வேளாண் கடன் அட்டைகளுக்கான (Kissan Credit Cards) வரம்பு ஐந்து இலட்சமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, 7.7 கோடி விவசாயிகளுக்கு கடன் அட்டை (Credit Card), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் விவசாயத்துறையில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டம் ஆகியவை வேளாண் தொழிலில் மத்திய அரசுக்கு உள்ள அக்கறையை படம் பிடித்து காட்டுகிறது.

இந்திய நாட்டின் முதுகெலும்பாக, வேலைவாய்ப்பினை வழங்கும் அட்சயபாத்திரமாக, அரசுக்கு வருமானத்தை தரக்கூடிய அமுதசுரபியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விளங்குகின்றன. இதனை நன்கு புரிந்துள்ள மத்திய அரசு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் வரை கடன் மானியம், புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம் 10,000 கோடி ரூபாய், தோல் பொருட்கள் துறையில் 22 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் திட்டம் போன்ற அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் இடம் பெறச் செய்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

இதே போன்று, அடுத்த ஆண்டில் 10,000 கூடுதல் மருத்துவ இடங்கள், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புற்று நோய் மையங்கள், Gig தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இலவச காப்பீடு, 500 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பின மையம், மாணவ, மாணவியருக்கு தாய் மொழியில் டிஜிட்டல் முறையில் பாடங்கள், நகரங்கள் மறு சீரமைப்பு பணிகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய், மாநிலங்களுக்கு 1.5 இலட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன், நாடு முழுவதும் 120 புதிய விமான நிலையங்கள், ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய அமைப்பு, கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இலவச Broadband வசதி, உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு, செல்போன் மற்றும் மின் வாகனங்களுக்கான லித்தியம் பேட்டரிக்கு சுங்க வரி ரத்து ஆகியவை மிகவும் வரவேற்க்கத்தக்கவை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வருமான வரி உச்ச வரம்பு 7 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பது நடுத்தர மக்களிடையே நல்ல வரவேற்பினை பெறும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இதே போன்று, வரி அடுக்கு குறைக்கப்பட்டு இருப்பது, மூத்த குடி மக்களுக்கான வருமான வரி பிடித்தம் 50,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பது, வாடகைக் கழிவு 2,40,000 ரூபாயிலிருந்து 6,00,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பது, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால வரம்பு இரண்டு ஆண்டிலிருந்து நான்கு ஆண்டாக உயர்த்தப்பட்டு இருப்பது ஆகியவை பாராட்டுக்குரிவை. மேலும், வருமான வரியை எளிமைப்படுத்தும் விதமாக, புதிய வருமான வரிச் சட்டம் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதேபோன்று, நாட்டின் வருவாய் அதிகரித்து, நிதிப் பற்றாக்குறை குறைந்து வருவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

மொத்தத்தில், மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் விதமாக, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் விதமாக, வேலைவாய்ப்பினை பெருக்கும் விதமாக 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அமையும். இந்த நிதிநிலை அறிக்கையினை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வரவேற்கிறேன்.

The post ஒன்றிய பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உள்ளது: ஒ.பன்னீர் செல்வம் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article