தொடரும் சீமானின் ஆபாச பேச்சுகள், அருவருப்பின் உச்சம்; பெண்களை அருகில் வைத்துக் கொண்டு முகம் சுழிக்கும் வகையில் பேசிய சீமான்: தனியாக வழக்குப் பதிவு செய்ய பெண் தலைவர்கள் வலியுறுத்தல்

1 day ago 2

சென்னை: பெண்களை அருகில் வைத்துக் கொண்டு, பெண்கள் பற்றிய சீமானின் அருவருக்கதக்க பேச்சுகளுக்கு அவர் மீது காவல் துறை தனியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பெண் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ேகாமாளித்தனமான பேச்சுகள் பல நேரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகவே உள்ளது. தலைவர்களை பற்றி அவதூறு பேச்சுகள், பெண்களை பற்றி ஆபாச பேச்சுகள் என அவரது பேச்சுகள் தொடர்ந்து கண்டனத்துக்குள்ளாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வந்தார். பெரியார் குறித்து இந்த அவதூறு கருத்துகள் திராவிட கட்சிகள் மற்றும் பெரியாரிய உணர்வாளர்களை கொதிப்படையச் செய்தது.

இந்நிலையில், திக, திமுக, பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த பலரும் சமீபத்தில் சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியில் இருக்கும் தொண்டர்களுக்கும் சீமானின் பெரியார் குறித்த நிலைப்பாடும், பேச்சும் பிடிக்காததால் கட்சியில் இருந்து விலகத் தொடங்கினர். இந்த சூழ்நிலையில், பாலியல் வழக்கு தொடர்பாக சீமான் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடர்பாக பேட்டியளித்த சீமான், பெண் என்றும் பாராமல் படு ஆபாசமாக பேசினார்.

சீமான் பேசியதில் பல வார்த்தைகளை ஊடகங்கள் மியூட் செய்து ஒளிப்பரப்பும் அளவுக்கு இருந்தன. சீமானின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பெண்கள் இயங்கங்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. தருமபுரியில் சீமான் அளித்த பேட்டியில், ‘என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா கற்பழிச்சு விட்டமாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க. கல்லூரியில் படிக்கும் பிள்ளையை கடத்திச்சென்று கற்பழித்தது போல் சித்தரிப்பதா? புகார் மீது விசாரணை நடத்திய பின் தானே குற்றம் நடந்ததா என்பது தெரியும். நடிகையை அச்சுறுத்தி நான் 7 முறை கருக்கலைப்பு செய்தேனா? அது உண்மையென்றால் அதுவும் ஒரு சாதனையே. ஒராண்டில் ஏழு முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளரும் நான்தான்’’ என்றும் பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சீமானின் முகம் சுழிக்கும் வகையிலான இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி பெண் அரசியல் பிரமுகர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பெண் அரசியல் பிரமுகர்கள் பலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
காங்கிரஸ் எம்பி சுதா: தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல, அநாகரீகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் சீமான். பெண்கள் தொடர்பாக பொதுவெளியில், அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேல், வயசுக்கு வந்த பெண்ணையா கற்பழித்தேன் என பெண்களை சுற்றி உட்கார வைத்துக் கொண்டு எள்ளலான உடல் மொழியில் பேசியது, பெண்களுக்கு எதிரான வன்முறையை இயல்பான ஒன்றாகப் பார்க்கும், இயல்பான ஒன்றாக மாற்றும் வக்கிர புத்தி அதில் ஒன்றுமில்லை.

பெண்களைச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு பேசியதன் மூலம், சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறார் சீமான்? 50 சதவீதத்துக்கு மேல் பெண்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு, பெண்மையைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார் சீமான். தமிழ்ச்சமூகத்தில் இடம் கொடுக்கப்படாமல் அவர் விரட்டப்பட வேண்டும். பெரியார் தொடர்பில் ஆதாரமின்றி அவதூறாக சீமான் பேசிய போது, அவர் எங்கள் தீம் பார்ட்டனர் (Theme Partner) என்று சொன்ன தமிழிசை சவுந்திரராஜன் இப்போது என்ன சொல்லப் போகிறார்?. அவர் பேசிய பேச்சுகள், எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பெண்கள், அந்தக் கட்சியை ஆதரிக்கும் பெண்கள் இனியும் இந்த வக்கிரவாதிக்கு ஆதரவு கொடுப்பதா என சிந்திக்கட்டும். சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உ.வாசுகி: கலப்படமற்ற அசலான குரூரமான ஆணாதிக்க மூளை சீமானுக்கு..ஒரு கட்சியின் தலைவர், ரேப் அக்யூஸ்டு… இத்தனை விசாரணைக்குப் பின்னுமா ரேப் சட்டம் தெரியவில்லை? பாதிக்கப்பட்டவரை வேறு நக்கல் செய்கிறார், நாதக உறுப்பினர்கள் இதற்காகவே கூண்டோடு விலக வேண்டும்.

திமுக சுற்றுச் சூழல் அணி மாநில துணை செயலர் பத்ம பிரியா: நாதக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு பெண்களைப் பற்றி தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இப்போதுதான் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. பணி இடங்களில் நல்ல அங்கீகாரம், சமநிலை போன்றவை கிடைக்கிறது. ஆனால் இப்படிப்பட்டவர்களின் சில வார்த்தைகளால் அவை அனைத்தும் தகர்ந்துவிடும்போல இருக்கிறது. பொதுவெளியில் பேசுவதை ஆயிரக்கணக்கானவர்கள் பார்ப்பார்கள், இளம் தலைமுறையினருக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர்கள் இப்படி தகாத வார்த்தைகளை பயன்படுத்தினால் அது தவறாக பலர் மனதில் பதியக்கூடும். சீமான் இப்படி பேசி இருப்பது மிகவும் தவறு. மனதில் என்ன இருக்கிறதோ அதுதான் வார்த்தையாக வரும். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி எனக் கூறிக் கொண்டு, பெண்களை அருகில் வைத்துக் கொண்டே இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசி இருக்கிறார். அரசியலுக்கும் அப்பார்பட்டு அவர் பேசியது அனைத்து பெண்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி: சீமான் பொதுவெளியில், எல்லை கடந்து வெளிப்படையாக அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறார். இவரெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக் கேடானது. தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு. பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிப்பது மட்டுமல்லாமல் பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார். அவரைப் பொறுத்தவரை பெண்ணை தூக்கிப்போய் பாலியல் வன்கொடுமை செய்யாமல் வேறு எவ்விதமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலும் அது பிரச்னையில்லை. எவ்வளவு வக்கிரமான மனநிலை.

அந்தக் குற்றச்சாட்டைத் தான் விஜயலட்சுமி சீமான் மீது வைக்கிறார். ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு அவரை ஏமாற்றுவதும் சட்டப்படி கடுமையான குற்றமே என்பதை சட்டம் சீமானுக்குப் புரிய வைக்கும். இப்படி, ஆபாசமாக பாலியல் வக்கிரத்தோடு, பெண்களை அவமதிக்கும் வகையில், பெண்களின் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசுகிற ஒருவரை ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும். இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு, பெண்களை கேவலமாக நினைப்பவர்களுக்கு பொதுவாழ்வில் எவ்வித இடமும் இருக்கக்கூடாது. சீமானின் இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அரசியல் விமர்சகரும், நடிகையுமான சர்மிளா: சீமானுக்கு எவ்வளவு திமிரு, ஆணவம், எகத்தாளம் இருந்தால் ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஒரு பாலியல் குற்றத்தை செய்தேன் என்று ஒத்துக் கொண்டு, அந்த விஷயத்தை சாதாரணமாக ஆக்க பார்க்கிறார். இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் சீமானின் அந்த செய்தியாளர் சந்திப்பில் பல பெண்கள் இருக்கிறார்கள். ஒன்று. அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் இல்லை என்றால், ஏதோ சீமான் பெரிய நகைச்சுவை சொன்னது போல கைதட்டி சிரிக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது, எந்த அளவுக்கு இந்த சமுதாயம் சீமானால் கெட்டு சீரழிந்து இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. அந்த இடத்தில் ஒரு பெண்ணுக்காவது சுயமரியாத இருந்திருந்தால், நாம் விஜயலட்சுமி இடத்தில் இருந்து, சீமான் நம்மை இப்படி பேசி இருந்தால் நாம் எப்படி பாதிக்கப்பட்டு இருப்போம் என்று ஒரு நிமிடம் யோசித்து இருக்க வேண்டும். அவரின் பேச்சைக் கண்டித்திருக்க வேண்டும். அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு கூடவா சுயமரியாதை இல்லை.

The post தொடரும் சீமானின் ஆபாச பேச்சுகள், அருவருப்பின் உச்சம்; பெண்களை அருகில் வைத்துக் கொண்டு முகம் சுழிக்கும் வகையில் பேசிய சீமான்: தனியாக வழக்குப் பதிவு செய்ய பெண் தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article