பெரியபாளையம்: பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் தை மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெரியபாளையத்தில் உள்ள பவானியம்மன் கோயிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி தினத்தில், உலக நன்மைக்காகவும், நோய்நொடியின்றி அனைத்து மக்களும் வாழ்வதற்காகவும் 108 பெண்களின் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை பவானியம்மன் கோயில் வளாகத்தில் உலக நன்மைக்காக 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை மிக விமரிசையாக நடைபெற்றது. இப்பூஜையில் பங்கேற்ற 108 பெண்களும் குத்துவிளக்கேற்றி, அதில் குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்து பவானியம்மனை வழிபட்டனர்.
பின்னர், உற்சவர் பவானியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு கோயில் வளாகத்தைச் சுற்றிலும் தங்கத்தேரில் உற்சவர் பவானியம்மன் காப்பு அலங்காரத்தில் வலம் வந்து, அங்கு கூடியிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்கரிக்கப்பட்ட அம்மனை அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோயில் அறங்காவலர் அஞ்சன்லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post தை மாத பவுர்ணமியை முன்னிட்டு பவானியம்மன் கோயிலில் 108 பெண்கள் விளக்கு பூஜை appeared first on Dinakaran.