வாஷிங்டன்: தேர்தல் நடத்தாமல் சர்வாதிகாரி போல் ஜெலன்ஸ்கி செயல்படுகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். ரஷ்யா- உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டி வருகிறார். உக்ரைன் நாட்டில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்தாண்டுடன் அவரது பதவி காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்த தேவையில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தேர்தலை நடத்துவதற்கு அவர் மறுத்து வருகிறார். இதனாலேயே, அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனுடன் சேர்ந்து போர் நீடித்திருக்க அவர் நாடகமாடி வந்துள்ளார். அங்கு தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஜெலன்ஸ்கிக்கு ஏற்படும். விரைவில் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளேன். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்கா-ரஷ்யா இடையே சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்தார்.
இதனால் கோபம் அடைந்த டிரம்ப், போர் தொடங்க உக்ரைன்தான் காரணம் என்றும், உக்ரைன் அதிபர் இந்த போரை நிறுத்தி இருக்க வேண்டும் என்றும் கடுமையாக சாடினார். இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் ஜெலன்ஸ்கி, “போருக்கு உக்ரைன்தான் காரணம் என்று டிரம்ப் கூறுகிறார். இந்த விவகாரத்தில் அவர் ரஷ்யாவால் தவறாக வழிநடத்தப்படுகிறார்’ என்று தெரிவித்தார். இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து பேச, தான் விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.
The post தேர்தல் நடத்தாமல் சர்வாதிகாரி போல் செயல்படுவதா..? உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சாடிய அதிபர் டிரம்ப் appeared first on Dinakaran.