புதுடெல்லி: மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 3 அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டில் நடைபெறவுள்ள தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள், புதுச்சேரி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெல்லியின் ஒன்பதாவது முதல்வராக ரேகா குப்தா நேற்று பதவியேற்ற பின்னர், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள், துணை முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. மேலும் ஒன்றிய அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லியின் இம்பீரியல் ஓட்டலில் நடைபெற்ற கூட்டம் முடிந்த பின்னர் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவ்டே கூறுகையில், ‘அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பீகார், மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ளது.
எதிர்க்கட்சிகளை தோற்கடிக்கும் வகையில் முழு பலத்துடன் கூட்டணி கட்சிகள் பணியாற்ற வேண்டும் என்று மோடி கூறினார்’ என்றார். மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக தள்ளப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு மாறாக தேசிய ஜனநாயக கூட்டணியை ஒருங்கிணைக்க தீவிர முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனதால், தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி போன்ற கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா மற்றும் டெல்லி பேரவை தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்டது; கூட்டணி கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சிவசேனா, லோக்ஜன சக்தி கட்சித் தலைவர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தனர். டெல்லியில் போட்டியிட்ட 70 வேட்பாளர்களில் 68 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள்; மற்ற இருவரும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்றைய கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, அப்னா தளத்தின் ஒன்றிய அமைச்சர் அனுப்ரியா படேல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் படேல் (அஜித் பவார்), ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவர் சஞ்சய் ஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆனால் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. அதேபோல், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகனும் ஒன்றிய அமைச்சருமான குமாரசாமி, லோக்ஜனசக்தி தலைவரும் ஒன்றிய அமைச்சருமான சிராக் பஸ்வான் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து பாஜக தலைவர்கள் கூறுகையில், ‘இந்தாண்டு இறுதியில் நடைபெறும் பீகார் தேர்தலையும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள மேற்குவங்கம், அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களையும் ‘பீகார் பார்முலா’-வை பின்பற்றி தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
பீகாரில் நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். இதுகுறித்து கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உள்ளது. கேரளா, தமிழ்நாட்டில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி சென்றுவிட்டார். மற்றொரு ஒன்றிய அமைச்சர் குமாரசாமி உடல்நிலை சரியில்லாததால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர் சிராக் பஸ்வான் வெளிநாட்டில் உள்ளார். சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓ.பி.ராஜ்பர், சில முக்கிய காரணங்களுக்காக கலந்து கொள்ளவில்லை’ என்று கூறினர்.
The post மோடி தலைமையில் நடந்த முக்கிய கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சிகளின் 3 அமைச்சர்கள் ‘மிஸ்சிங்’: தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள், புதுச்சேரி தேர்தல் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.