தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை; கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்துப்போக செய்தது அதிமுகதான்: அமைச்சர் ரகுபதி பேட்டி

20 hours ago 2

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கச்சத்தீவு மீட்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து தலைமைச்செயலக வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியுடன் இருந்தீர்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார். ஆனால் கச்சத்தீவு குறித்து திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த பிரச்னை வந்த போது, ஒருபோதும் கச்சத்தீவை தாரைவார்ப்பதை அனுமதிக்க மாட்டோம் என கலைஞர் தெளிவுபடுத்தி இருந்தார்.

ஒரு மாநிலத்திற்கு சொந்தமான இடம், வேறு நாடுகளுக்கு கொடுப்பதாக இருந்தால், அந்த மாநிலத்தில் கலந்து ஆலோசிக்க வேண்டும். அடுத்ததாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கான ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை. மாநில அரசை சட்டப்படி கலந்து ஆலோசித்ததாகவும் அங்கே இல்லை. எங்களை சொல்பவர்கள், அவர்கள் கூட்டணியில் இருந்த காலத்தில் கச்சத்தீவை மீட்டு இருக்கலாமே.எனவே, இப்போது நாங்கள் இருந்தோம், நீங்கள் இருந்தோம் என சொல்லாமல் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை. தேர்தலைப் பார்த்து பயப்படும் கட்சி திமுக இல்லை. பிரதமர் இலங்கைக்கு செல்ல இருக்கிறார், அங்கு மீனவர் பிரச்னை குறித்து பேச வாய்ப்பு உள்ளது என்பதால்தான் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதற்கு பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் கண்டிப்பாக பிரதமர் இதனை பற்றி இலங்கையில் பேசுவார் என எதிர்பாக்கிறோம்.

செல்வப்பெருந்தகை கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கச்சத்தீவை கொடுத்தது தவறு, தமிழகத்திற்கு தான் நட்டம். லாப நோக்கு கணக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கச்சத்தீவை கொடுத்ததற்கும் வேறு ஒரு இடத்தை பெற்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 1991ம் ஆண்டு ஆக.15ம் தேதி அன்று கோட்டையில் கொடி ஏற்றிய அன்றைய முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்டே தீருவோம் என சபதம் செய்தார். ஆனால் 1992ம் ஆண்டு ஜன.20ம் தேதி கச்சத்தீவை மீட்பது சுலபம் அல்ல என பேசினார் ஜெயலலிதா.

இந்தியா -இலங்கை நல்லுறவை மேம்படுத்தவே கச்சத்தீவு கொடுக்கப்பட்டுள்ளதாக 1994ல் பிரதமர் நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டு உள்ளார். கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்து போக செய்தது அதிமுகதான். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

The post தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை; கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்துப்போக செய்தது அதிமுகதான்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article