பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே, பெரும்பாறை மலைப்பகுதியில் மிளகு விளைச்சல் அமோகமாக உள்ளது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மற்றும் பெரும்பாறை மலைப்பகுதியில் மங்களங்கொம்பு, கே.சி.பட்டி, ஆடலூர், புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, பன்றிமலை, கும்பம்மாள்பட்டி, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் காஃபி, ஆரஞ்சு, ஏலக்காய், எலுமிச்சை உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன. பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்கள் மிளகிற்கு முதல் சீசனாகும். ஜூன், ஜூலை மாதங்கள் 2ம் சீசனாகும். இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த மார்ச் முதல் மிளகு அறுவடை நடந்து வருகிறது. மரங்களில் படர்ந்து வளர்ந்துள்ள கொடிகளில், உயரமான ஏணிகளை பயன்படுத்தி, மிளகை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பச்சை மிளகுகளை தரம் பிரித்து, வெயிலில் காயவைத்து, கருப்பு மற்றும் வெள்ளை ரகமாக மாற்றப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அறுவடை செய்த பச்சை மிளகுகளை காயவைப்பதற்கு போதிய களவசதி இல்லாத சிறு, குறு விவசாயிகள் அவற்றை அப்படியே விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். மிளகு விளைச்சல் குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: இந்தாண்டு மிளகு விளைச்சல் அதிகரித்துள்ளது. விலையும் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.700 முதல் 800 வரை விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு மகிழ்சியளிக்கிறது.
இப்பகுதியில் தரமான, மருத்துவ குணமிக்க மிளகு விளைகிறது. இங்கு விளைவிக்கப்படும் மிளகுகளுக்கு இயற்கையிலேயே அதிக காரத்தன்மை உள்ளது. சில நேரங்களில் இறக்குமதி செய்யப்படும் கலப்பட மிளகு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் விளையும் மிளகு விலை வீழ்ச்சிடைந்து விடுகிறது. கலப்பட மிளகு விற்பனையை தடை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
The post பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறையில் மிளகு விளைச்சல் அமோகம்: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.