திருப்புவனம்: தேர்தலில் மட்டுமே கூட்டணி; ஆட்சியில் கூட்டணி இல்லை என பாஜவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் அமைக்க டெல்லி பாஜ மேலிடம் தீவிரமாக ஈடுபட்டது. இதற்காக அடிபணியாத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது உறவினர் ராமலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி ரூ.600 கோடி முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் எடப்பாடி மற்றும் அவரது மகனுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதை பயன்படுத்தியும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி மீது அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகளை காட்டியும் அதிமுகவுடனான கூட்டணி பாஜ உறுதி செய்ததது. சமீபத்தில் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக-பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்’ என்று தெரிவித்தார். இந்த பேட்டியின்போது எடப்பாடி பழனிசாமியுன் உடனிருந்தார். கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லும்போது அவர் வாய் திறக்கவில்லை.
கூட்டணி ஆட்சிக்கு அதிமுகவில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ‘அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. அதிமுக-பாஜ இடையே கூட்டணி மட்டும்தான்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா பார்த்து கொள்வார்’ என்று கூறினார். இதற்கிடையே, நெல்லையில் வருங்கால் முதல்வர் நயினார் நாகேந்திரன் என்று பாஜவினர் போஸ்டர் ஓட்டினர். இதனால், அதிமுக கூட்டணிக்கு நயினார் நாகேந்திரன் முதல்வர் வேட்பாளரா? என்று பரபரப்பு எழுந்தது. சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை. அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.
கூட்டணி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டணி குறித்து பேச எடப்பாடி, நயினார் நாகேந்திரன் தடை விதித்தனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச்செயலாளர் மணிமாறன் என்பவரது பெயரில் நேற்று காலை திருப்புவனம் மற்றும் மாவட்டம் முழுவதும் போஸ்டர்களால் ஒட்டப்பட்டுள்ளது. அதில், `2026ல் அதிமுக – பாஜக கூட்டணி மட்டுமே. பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் தனித்தே ஆட்சி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக-பாஜவினர் மாறி மாறி பேட்டி கொடுப்பதும், போஸ்டர் ஒட்டுவதும் தொடர்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post தேர்தலில் மட்டுமே கூட்டணி… ஆட்சியில் இல்லை… பாஜவுக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர்: மீண்டும் மீண்டும் மோதலால் பரபரப்பு appeared first on Dinakaran.