தேய்பிறை அஷ்டமி.. கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

2 hours ago 1

கால பைரவரை வழிபடுவதற்கு உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி ஆகும். தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் கோவில்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அவ்வகையில் சித்திரை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலிலும் காலபைரவர் வழிபாடு நடைபெற்றது.இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலிலும் காலபைரவர் வழிபாடு நடைபெற்றது.இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பல்லடம்

பல்லடம் அருகே,மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலபைரவருக்கு சந்தனம், பால், தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர்.

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தில் வடுகநாத சாமி கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பல்லடம் பொன்காளியம்மமன் கோவில், சித்தம்பலம் நவகிரகக்கோட்டை சிவன்கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை வழிபட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் , பஞ்சாமிர்தம், கரும்புச் சாறு, தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள காலபைரவர், புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள கால பைரவர், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவிலில் உள்ள கால பைரவர் மற்றும் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Read Entire Article