
திருச்சூர்,
கேரளாவில் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டில் தேன் மற்றும் பிற பொருட்களை சேகரிப்பதற்காக 4 பேர் சென்று காட்டில் தங்கியுள்ளனர். அது யானைகள் அதிகம் உலவும் பகுதி. இதனால், முன்னெச்சரிக்கையாக தற்காலிக குடில் அமைத்து, குடிலுக்கு முன்பாக மரக்குச்சிகளை போட்டு தீவைத்து எரித்துள்ளனர்.
இப்படி எரியும் தீயை பார்த்தால் யானைகள் அருகே வராது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. ஆனால், திடீரென பெய்த மழையில் தீ அணைந்து விட்டது. இதனால், அங்கு தங்கியிருந்த 4 பேருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
இந்த நேரத்தில், அப்பகுதிக்கு காட்டு யானைகள் வந்துள்ளன. யானைகளை பார்த்ததும் தப்பியோட முயன்றபோது, சதீஷ், அம்பிகா ஆகியோரை காட்டு யானை தாக்கியது. அவர்களை தூக்கி வீசியது. இந்த சம்பவத்தில் இருவரும் துடிதுடித்து இறந்தனர். மற்ற 2 பேரும் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதேபோன்று, மலக்கபாப்ரா காட்டு பகுதிக்கு 3 பேர் சென்றனர். அவர்களில் செபாஸ்டியன் (வயது 20) என்பவர் யானை தாக்கியதில் பலியானார். அவருடன் சென்ற மற்ற 2 பேர் தப்பியோடினர். இதனால், தேன் எடுக்க சென்றவர்கள் மீது யானை தாக்கியதில் கடந்த 48 மணிநேரத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த பிப்ரவரியில், ஒரே வாரத்தில் 5 பேர் வன உயிரின தாக்குதலில் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, கேரள வனத்துறை மந்திரி ஏ.கே. சசீந்திரன், அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
வன உரிமைகள் சட்டத்தின்படி, ஆதிவாசிகள் காட்டில் தங்க முடியும். அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை. ஆனால், அவர்களை பாதுகாக்கும் பணியை கண்டுகொள்ளாமல் அரசு இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவரான சதீசன் குற்றச்சாட்டாக கூறினார்.