*ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தேனி : தேனி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் நடந்த தைப்பூசத் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
தமிழ் மாதம் தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம், முருகனுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாக விளங்குகிறது.
முருகன் கோயில்கள் தவிர மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களிலும் இந்த தைப்பூசத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நாளில் பழநி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு சென்றும், பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றுவர். பழநி மட்டும் இல்லாமல் வெவ்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதன்படி, தை பூச திருநாளான நேற்று தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள வேல்முருகன் கோயில், என்.ஆர்.டி நகரில் உள்ள கணேச கந்தபெருமாள் கோயிலில் உள்ள முருகன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதேபோல, தேனி அல்லிநகரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வீரப்ப அய்யனார் கோயில் வளாகத்தில் பனசலாறு அருள்முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து, விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
போடி: போடி அருகே தேனி சாலையில் அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நைனார் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இங்குள்ள தீர்த்த தொட்டியில் பக்தர்கள் தண்ணீர் அருந்தி, சிறப்பு பூஜைகளில் கலங்கு கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத்தையொட்டி, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், தேனி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கான பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி: தைப்பூசத்தையொட்டி நேற்று தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மூங்கிலணை காமாட்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. காலை முதல் இரவு வரை வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து சென்றனர். இதற்கான பாதுகாப்பு பணிகளில் தேவதானப்பட்டி போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே உள்ள அணைப்பட்டி காமயகவுண்டன்பட்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் சண்முகநாதர் மலை திருக்கோயில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் கோயில் உள்ளதால், சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கட்டுப்பாடுகளோடு பக்தர்களுக்கு அனுமதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு சண்முகநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, கம்பம், சுருளிப்பட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கம்பம் வனத்துறை மற்றும் ராயப்பன் பட்டி காவல் துறையின் சார்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சின்னமனூர்: சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைச்சாலையில் ஓடைப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தென்பழநி கிராமத்தில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில், தைபூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post தேனியில் முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா appeared first on Dinakaran.