தேனி: தேனியில் பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கியதாக கூறி, அந்நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யுமாறு சென்னை எஸ்சி – எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேனி, ராஜா களம் பகுதியில் உள்ள 40 சென்ட் பஞ்சமி நிலத்தை, கடந்த 1991ம் ஆண்டு மூக்கன் என்பவருக்கு ஆதிதிராவிட நலத்துறை வழங்கியது. இந்த நிலத்தை 15 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்யக் கூடாது எனவும், அதன் பிறகும் அந்த நிலத்தை பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்க முடியும் எனவும் நிபந்தனை உள்ளது.
இதனை மீறி, இந்த நிலத்தை பட்டியலினத்தைச் சாராத ஹரி சங்கர் என்பவருக்கு கடந்த 2008ம் ஆண்டு மூக்கன் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரிடமிருந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்நிலத்தை வாங்கி, தனது பெயரில் பட்டா வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மூக்கனின் மகன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இப்புகாரை விசாரித்த சென்னையில் உள்ள மாநில எஸ்.சி – எஸ்.டி ஆணையம், பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த நிலத்துக்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை அரசு ரத்து செய்ய உத்தரவிட்டது. முறையற்ற வகையில், நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இத்தீர்ப்பின்போது, நிலம் வாங்குவோர், தாய் பத்திரங்களை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.
பஞ்சமி நிலங்களை மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என சுற்றறிக்கைகள் பிறப்பிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மாவட்ட பத்திர பதிவாளர்களுக்கும் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக தேனி பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலத்தினை, சட்டத்திற்கு புறம்பாக ஓபிஎஸ் உதவியாளராக இருந்த அன்னபிரகாஷ் உள்ளிட்ட பலருக்கும் பட்டா மாறுதல் செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கினை தொடர்ந்து, பட்டா மாறுதல் செய்யப்பட்ட அனைத்து நிலங்களையும் அரசு கையகப்படுத்தியது. அப்போது ஓபிஎஸ் சகோதரர் ஒருவரது பெயரில், பஞ்சமி நிலம் பெறப்பட்டதாகவும், அந்த நிலமும் அந்த காலகட்டத்தில் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் எஸ்சி, எஸ்டி அல்லாத சிலருக்கு விற்கப்பட்டது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஓபிஎஸ் பெயரில் பெறப்பட்ட பட்டாவை ரத்து செய்ய எஸ்சி – எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தேனியில் ஓபிஎஸ் வாங்கிய பஞ்சமி நில பட்டா ரத்து: எஸ்சி – எஸ்டி ஆணையம் அதிரடி appeared first on Dinakaran.