புதுச்சேரி, பிப். 12: புதுச்சேரியில் காதல் பிரச்னை காரணமாக வாலிபரை ஓட, ஓட விரட்டி உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். புதுச்சேரி ஆலங்குப்பம் பள்ளி வீதியை சேர்ந்தவர் ராஜேஷ் (24). இவர் ஆரோவில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். தினமும் காலை வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு வருவது வழக்கம். இவரும், சஞ்சீவி நகரை சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துள்ளனர். பிறகு, குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக வேறொரு பெண்ணை ராஜேஷ் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷ் தற்போது காதலித்து வரும் பெண்ணுக்கும், முன்னாள் காதலிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் முன்னாள் காதலி அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ் மற்றும் அவரது காதலியை அழைத்து பேசி கண்டித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு, ராஜேஷிடம் முன்னாள் காதலியின் அண்ணன் சிவராமன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் கடந்த 8ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு கிளம்பி இருசக்கர வாகனத்தில் ஆலங்குப்பம் பள்ளிக்கூட வீதி வழியாக சென்றுள்ளார். அப்போது, சிவராமன், அவரது நண்பர்கள் சந்திரமவுலீஸ்வரன், தமிழரசன், விஜய், பிரகாஷ், சந்தோஷ் ஆகியோர் ராஜேஷை வழி மறித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர். பிறகு, சிவராமன் தன்னுடைய தங்கையை விட்டுட்டு வேறொரு பெண்ணுடன் சுற்றுகிறாயா? என்று கேட்டு ராஜேஷை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். பிறகு, அவர் கையில் வைத்திருந்த இரும்பு ராடை கொண்டு தாக்கியுள்ளார்.
உடனே ராஜேஷ் வலி தாங்காமல் அவர்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளார். இருப்பினும், சிவராமன் மற்றும் அவரது நண்பர்கள் ராஜேஷை விடாமல் துரத்தி சென்று சுற்றி வளைத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையை கொண்டு சரமாரியாக தாக்கினர். மேலும், கத்தியால் வெட்ட முயன்றனர். அப்போது, ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் ராஜேஷிற்கு கொலைமிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த அவர் ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இதுகுறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் சிவராமன், சந்திரமவுலீஸ்வரன், தமிழரசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள விஜய், பிரகாஷ், சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
The post புதுச்சேரி அருகே பரபரப்பு: காதல் பிரச்னையில் வாலிபரை ஓட, ஓட விரட்டி சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.