சென்னை: சென்னை அண்ணாசாலை காங்கிரஸ் அறக்கட்டளை நிலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், நிலத்தை எடுத்து கொண்டதாக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் அறக்கட்டளை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக 180 கிரவுண்ட் நிலம் உள்ளது. காமராஜர் அரங்கத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறுவனத்துடன் காங்கிரஸ் அறக்கட்டளை 1996ம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த நிலத்தில், திறந்தவெளி நிலத்தை பராமரிப்பது தொடர்பாக காங்கிரஸ் அறக்கட்டளை ஆட்சேபமில்லா சான்று வழங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது எனக் கூறி தனியார் நிறுவனத்திடமிருந்து நிலத்தை காங்கிரஸ் அறக்கட்டளை கையகப்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து மத்தியஸ்தர் முன்பு தனியார் நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை நிலத்திற்கான தங்களது உரிமையில் தலையிட காங்கிரஸ் அறக்கட்டளைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ப்ளூ பேர்ல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஒப்பந்தம் இன்னும் காலாவதி ஆகவில்லை. ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் நிலத்தை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் அறக்கட்டளை சுவாதீனம் எடுத்துக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. காங்கிரஸ் கமிட்டி சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.பி.சூரியபிரகாசம், விக்டர் ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காங்கிரஸ் அறக்கட்டளை மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மே 14ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
The post தேனாம்பேட்டை காங்கிரஸ் அறக்கட்டளை நிலம் விவகாரம்; ஒப்பந்தத்தை மீறியதாக தனியார் நிறுவனம் வழக்கு: காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.