
சென்னை,
போலீஸ் இன்ஸ்பெக்டர்களான விமலும், புகழும் (பெண்ணாக) தொழில் போட்டியால் அவ்வப்போது மோதிக்கொள்கிறார்கள். இதற்கிடையில் அமைச்சர் ரவி மரியாவின் மகன் கொல்லப்பட, போலீசாருடன் அவருக்கு பகை ஏற்படுகிறது.
அதேவேளை கட்சியில் இருந்து ரவி மரியாவை நீக்க முடிவு எடுக்கிறார்கள். அப்போது சக அமைச்சர்களின் அந்தரங்க ரகசியங்கள் அடங்கிய சி.டி.யை வெளியிடுவேன் என்று ரவி மரியா மிரட்டுகிறார்.
இதற்கிடையில் வங்கியில் இருந்த அந்த சி.டி. திருட்டு போகிறது. அந்த சி.டி. திருட்டின் பின்னணியில் கொடூரமான கொள்ளையர்கள் இருப்பது தெரியவருகிறது. அந்த சி.டி. கைப்பற்றப்பட்டதா? அமைச்சரின் மகன் கொலைக்கான காரணம் என்ன? என்பதே மீதி கதை.
கலகலப்பு நிறைந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் முடிந்தவரை ஆறுதல் அளித்துள்ளார், விமல். போலீஸ் இன்ஸ்பெக்டரான அவர், ரவுடிகளுடன் நட்பு பாராட்டுவதை நம்பமுடியவில்லை.
உயர் அதிகாரியாக வரும் பூஜிதா அழகில் வசீகரிக்கிறார். 'என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று அறிமுகமாகும் அவர், காமெடி போலீசாகவே வலம் வருகிறார்.
ஜனா, ஹர்ஷிதா, ஜூஹி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் கொடுத்த கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். அரசியல்வாதியாக சில காட்சிகளே வந்தாலும் டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் கவனம் ஈர்க்கிறார். காமராஜர் ஸ்டைலில் அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது.
ரவி மரியா, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, லொள்ளுசபா சுவாமிநாதன், மதுமிதா, மதுரைமுத்து, சாம்ஸ், கோதண்டன் என நகைச்சுவை பட்டாளங்கள் நிறைந்திருந்தும், சிரிக்க வைக்க சிரமப்பட்டு இருக்கிறார்கள். புகழுக்கு எதற்கு பெண் வேடம்?
ஆர்.செல்வாவின் ஒளிப்பதிவும், வித்யாசாகரின் இசையும் ஓரளவு கைக்கொடுக்கிறது. பாடல்களை காட்சிப்படுத்தியதில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஓரிரு காமெடிகள் ரசிக்க வைத்தாலும், காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததுபோல நகரும் சொதப்பலான திரைக்கதை பலவீனமாக அமைந்துள்ளது. லாஜிக் மீறல்கள் பற்றி யோசிக்காமல் காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து, படத்தை இயக்கியுள்ளார் எஸ்.எழில்.
தேசிங்குராஜா 2 - நிர்வாகம் பொறுப்பல்ல.