
லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 387 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வாலின் (13 ரன்கள்) விக்கெட்டை விரைவில் இழந்தது. இருப்பினும் கே.எல்.ராகுல் - கருண் நாயர் நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியின் ஸ்கோர் 74 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. கருண் நாயர் 40 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இந்த கேட்சையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் இதுவரை 211 கேட்சுகள் பிடித்துள்ளார். இதன் மூலம் 148 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் அதிக கேட்சுகள் பிடித்த பீல்டர் (விக்கெட் கீப்பரை தவிர்த்து) என்ற உலக சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவின் ராகுல் டிராவிட் 210 கேட்சுகள் பிடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ஜோ ரூட் - 211 கேட்சுகள்
2. ராகுல் டிராவிட் - 210 கேட்சுகள்
3. ஜெயவர்த்தனே - 205 கேட்சுகள்
4. ஸ்டீவ் சுமித்/ஜாக் காலிஸ் - 200 கேட்சுகள்
5. பாண்டிங் - 196 கேட்சுகள்