
தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலைக் கல்லூரியில் இன்று உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் தனித்துவமான கருப்பொருளின் அடிப்படையில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள்: "ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு; திட்டமிட்ட பெற்றோர்கான அடையாளம்".
இந்த தினத்தில் பின்வரும் சமூக மற்றும் பொருளாதார சீர்கேடுகளை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். வளர் இளம் பெண்களிடையே காணப்படும் ரத்தசோகை குறைபாட்டினை முற்றிலும் ஒழித்தல், தாய் சேய் நலத்தினை பாதுகாத்தல், பெண் கல்வியினை ஊக்குவித்தல், இளம் வயது திருமணம் மற்றும் கர்ப்பங்களைத் தவிர்த்தல், பாலினப் பாகுபாடுகளைக் களைதல், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பலாத்காரங்களை முற்றிலும் ஒழித்தல், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் 200 பேர் கலந்து கொண்டனர். இவ்விழிப்புணர்வு ரதத்தின் வாயிலாக, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் மகளிர் குழுக்கள், பெற்றோர்கள் அதிகமாக பங்கேற்கின்ற நிகழ்வில் குறிப்பாக திருவள்ளூர், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு 18 வயது முடிவடைந்த பின்னர், திருமணம் செய்து கொடுக்கின்ற பொழுதுதான் குழந்தை பிறப்பதற்கு ஏற்ற உடல் ஆரோக்கியமாக இருக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு முன்னரே திருமணம் முடிந்த கர்ப்பிணியாக சில பெண்கள் உள்ளனர் என மருத்துவத்துறை மூலமாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு திருமணம் செய்த குடும்பத்தை சந்தித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது என முடிவெடுக்கின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயது முடிவடைவதற்கு முன்னதாகவே, தானாக முன்வந்து செய்கின்ற திருமணம் குழந்தை திருமண சட்டப் பிரிவின் கீழ் தண்டனைக்குரியது என்பதால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக கடந்த 4 ஆண்டுகளில் குழந்தை திருமணம் தொடர்பாக பெற்றோர்கள், மாணவியர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் புதிதாக தேவைப்படும் இடங்களில் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன் மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் கூட 34 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டிருக்கிறது.
அங்கன்வாடி மையங்களை நவீனப்படுத்துவதற்காக அரசு முயற்சி எடுத்து வருகிறது. சுமார் 6,500 அங்கன்வாடி மையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான நல்ல வசதியான சூழலை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் எல்இடி திரை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைத்து கொடுப்பதில் அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குநர் பிரியதர்ஷினி, துணை இயக்குநர்கள் பொன்ரவி (குடும்பநலம்), சுந்தரலிங்கம் (காசநோய்), மருத்துவக் கண்காணிப்பாளர் பத்மநாபன், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், புள்ளி விபர உதவியாளர், அனைத்து வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள், குடும்பநல அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.