தருமபுரி: தனி பட்டா வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

5 hours ago 1

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (32 வயது). விவசாயி. இவர் தனது தந்தை பெயரில் இருந்த 5½ ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து தனது பெயரிலும், தனது 2 சகோதரிகளின் பெயர்களிலும் பத்திரப்பதிவு செய்தார்.

அதற்கு தனி பட்டா வழங்கக்கோரி இளையராஜா ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தார். பின்னர் அந்த நகலுடன் அவர் மணியம்பாடி கிராம நில அளவையர் விஜயகுமார் (28 வயது) என்பவரை அணுகினார். அப்போது அவர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தனி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளையராஜா இது தொடர்பாக தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை நில அளவையரிடம் கொடுக்குமாறு இளையராஜாவிடம் கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் அந்த பணத்தை மணியம்பாடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நில அளவையர் விஜயகுமாரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் பெற்ற நில அளவையர் விஜயகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Read Entire Article