
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
'தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோளுண்டு' என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வரிகளை நெஞ்சில் ஏந்தி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் தடந்தோள்களுடனும் வலிமை மிக்க கால்களுடனும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கவிதை வரிகளால் நமக்கு உணர்வூட்டிய திராவிடக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடெங்கும் அரசின் சார்பில் தமிழ்க் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் சட்டமன்றத்தில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அது முந்தைய ஆட்சியைப் போல வெறும் மேசையைத் தட்டுவதற்கான அறிவிப்பாக மட்டும் இருப்பதில்லை. அறிவிக்கப்பட்டவை செயல்வடிவம் பெறவேண்டும் என்ற உறுதியுடன், கடைக்கோடி கிராமம் வரை அது சென்று சேரும் வரை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் ஓய்வதில்லை.
தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும். அரசியல் சட்ட மாண்பினைக் காக்கும் செயல்பாட்டுடன் இந்தியாவின் பாதுகாவலனாகவும், தமிழ்நாட்டிற்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாகவும் உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் இறுதி வரை உறுதியாக நிற்பேன்.
உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் தலைமையிலான இந்த ஆட்சியின் ஜனநாயகப் போக்கினை, 'நாகரிக ' அரசியல்' என்கிற உங்களின் மனக்குரல் எனக்கும் கேட்கிறது. இந்த இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், கட்டிக்காத்த முத்தமிழறிஞர் கலைஞரும், அவருக்கு உறுதுணையாக இருந்த இனமானப் பேராசிரியர் அவர்களும் உங்களால் தலைவனாக்கப்பட்ட - மக்களால் முதல்-அமைச்சராக்கப்பட்ட எனக்குக் கற்றுத் தந்த பண்புகளல்லவா?
ஆம்.. நாம் நாகரிகமாகத்தான் நடந்து கொள்கிறோம். நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை. இது நம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களிடம் நாம் வெளிப்படுத்தும் பொறுப்புணர்வு. ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள். நாம் அவர்களின் சேவகர்கள்.
நம் ஆட்சியின் மகத்தான திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் பயன் தந்திருப்பதால், எதிர்க்கட்சியினர் பொறாமையுடன் விமர்சிப்பது போல, நாம் தமிழ்நாட்டின் குடும்பக் கட்சியாகத் திகழ்கிறோம். அதனால்தான் சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவு பெற்ற நாளில், 7-ஆவது முறையாகத் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றும், திராவிட மாடல் அரசின் 'version 2.0 loading' என்றும் உறுதியாகத் தெரிவித்தேன்.
ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் குறிப்பிட்டேன். "மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் மதில் சுவர்கள் என்பது போல ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் கவர்னர், நிதி நெருக்கடி எனப் பல தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வருகிறோம்" என்று.
திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை. சந்திக்காத சவால்கள் கிடையாது. சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை உடன்பிறப்புகளான நீங்கள் இத்தனை காலம் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க என்பது தமிழ்நாட்டின் நலனை மட்டுமின்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் என்பதை எதிரிகளின் மனசாட்சியும் சொல்லும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! மக்களின் பேராதரவுடன் தி.மு.கவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.